July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய விவசாயிகள் போராட்டம்: கவலை தெரிவித்த கனடா பிரதமர்!

டெல்லியில் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து முன்னெடுக்கப்படும்  விவசாயிகளின் அமைதிப் போராட்டத்துக்கு கனடா எப்போதும் துணை நிற்கும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்திகள்  குறித்து அதிகம் கேள்விப்படுகிறேன். அங்குள்ள நிலைமை கவலையளிக்கும் வகையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சீக்கிய குரு குருநானக்கின் 551-வது பிறந்தநாளை முன்னிட்டு காணொளி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“அமைதியாகப் போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் குறித்து இந்திய அரசுக்கு பல வழிகளில் தெரிவித்துள்ளோம். அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய நேரம் இது” என்றார்.

அத்துடன் இந்தியாவில் விவசாயிகள் முன்னெடுத்து வரும் போராட்டத்தை கவனிக்காவிட்டால் நான் கடமை தவறியவனாவேன், அவர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம். எங்களின் மனநிலை உங்களில் பலருக்கு நன்கு தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

அமைதி வழியில் எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமையைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணையிருக்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன் என பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தலைவராக இருந்தாலும் இந்தியாவில் இடம்பெறக்கூடிய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தமையானது பல விவசாயிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில்,போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக இன்றைய தினம் விவசாய குழுக்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு  அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.