January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீவிரமடையும் டெல்லி விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தையில் தீர்வு கிட்டுமா?

photo: Facebook/ AIKSCCTamilnadu

இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் ‘டெல்லி சலோ’ டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல் என்ற போராட்டத்தை  6 ஆவது நாளாகவும் முன்னெடுத்து வருகின்றனர்.

வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் டெல்லியில் முகாம்கள் அமைத்து, கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுமார் 4000 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போது டெல்லியின் புறநகர் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லொறிகளிலும், டிராக்டர்களிலும் படையெடுத்துள்ள விவசாயிகள், 6 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் உடன் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமக்குத் தேவையான உணவை தாமே தயாரித்துக் கொண்டும், வீதியோரங்களில் தங்கியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனினும், சிங்கு, சம்பு மற்றும் திக்ரி ஆகிய எல்லை பகுதிகளிலும் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்துகின்றனர்.

விவசாயிகள் மீது தடியடி 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பொலிஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும், தண்ணீர் அடித்தும் போராட்டத்தைக் களைக்க முற்பட்டனர்.

நிலை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல பொலிஸார் அனுமதி வழங்கினர்.

மேலும் டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த பொலிஸார் அனுமதி அளித்துள்ளனர்.

விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை

டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் புதிதாக இயற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் சில தவறான புரிதல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.  தீவிரமாகும் கொரோனா தொற்று மற்றும் குளிர்காலம் போன்ற நிலைமைகளை கருத்திற்கொண்டு விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி, இணக்கத்துக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால்தான், அனைத்து விவசாய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு உறுதி பூண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை குறித்து தீர்மானமில்லை

இன்று விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. எனினும் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என முடிவுசெய்யவில்லை என விவசாயிகளின் தலைவர் குர்நாம் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதிய வேளாண் சட்டங்களை ரத்துச்செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கு இடமில்லை. முடிவு தெரியாமல் நாங்கள் டெல்லியில் இருந்து செல்லமாட்டோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

எங்கள் (மனதின் குரலை) ‘மான்கிபாத் பிரதமர் மோடி கேட்கவேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை அரசு எங்களை புறக்கணித்தால், அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

மக்களுக்காக நடத்தப்பட வேண்டிய ஆட்சி, பெரும் நிறுவனங்களின் நலனுக்காக நடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

32 குழுக்களுக்கு மட்டும் அரசு அழைப்பு

நாட்டில் 500 இற்கும் மேற்பட்ட விவசாய குழுக்கள் உள்ளன. ஆனால் பேச்சுவார்த்தைக்கு 32 குழுக்களை மட்டுமே அரசு அழைத்து உள்ளது.

பிற குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பஞ்சாப் விவசாய சங்கத்தின் இணை செயலாளர் சுக்விந்தர் சபரான் தெரிவித்துள்ளார்.

அனைத்து குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடப்படும் வரையில், நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.