
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே முழுமையாக கரையைக் கடந்துள்ளது.
புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 வரையான காலப்பகுதியில் நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வரையான நிலவரப்படி கரையை கடந்த நிவர் புயல், வட கடலோர தமிழகத்தில் புதுவைக்கு வட மேற்கு திசையில் 50 கிலோ மீட்டர் தொலைவில் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வட மேற்கு திசையில் நகர்ந்து சாதாரண புயலாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடந்த போது புதுச்சேரி, கடலூர், மரக்காணம் ஆகிய பகுதிகளில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்துள்ளதுடன், பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 120 – 130 கிலோ மீட்டர் வரை இருக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டிருந்த போதும், அது கரையை கடந்த போது காற்றின் வேகம் வலுவிழந்தாகவே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.