
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த ‘நிவர்’ புயல் இலங்கையின் காங்கேசந்துறை கடற்கரைக்கு கிழக்காக ஏறத்தாழ 330 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்து வரும் மணித்தியாலங்களில் அதி தீவிர புயலாக தமிழ்நாடு கரையைக் கடக்கவுள்ளது.
இந்தப் புயலின் தாக்கம் காரணமாக இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ‘நிவர்’ புயல், தீவிர புயலாக உருவெடுத்தது. இன்று மாலை தமிழகத்தின் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் முதல் 130 கிலோ மீட்டர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.