அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அது 12 மணி நேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து சுமார் 430 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 5 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நிவர் புயல் அதி தீவிர புயலாக புதுச்சேரி அருகே நாளை மாலை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில் காற்றின் வேகம் 145 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாளை ஒருநாள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
நிவர் புயலின் தீவிரத்தன்மையை அறிந்து தமிழ்நாடு அரசு நாளைய தினத்தை பொது விடுமுறையாக அறிவித்திருக்கிறது.
மேலும் கடலூர் ,புதுக்கோட்டை ,நாகை ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து சேவை நிறுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்திருக்கிறார்.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 27ஆம் தேதி வரை மழை தொடரும் எனவும் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடலோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் சில நேரம் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசலாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது
இதனால் தாழ்வான பகுதிகளில் இருப்போர் மற்றும் குடிசைப் பகுதியில் வசிப்பவர்களை இரவுக்குள் பாதுகாப்பு மையங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.