ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சுமார் மூன்று தசாப்தங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக அரசு சிறப்பு மசோதா ஒன்றை நிறைவேற்றி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது.
ஆனால் ஆளுநர் இதுவரை அந்த மசோதா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழக அரசுடன் எதிர்க் கட்சியினரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.
சுமார் 29 ஆண்டுகாலம் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து சட்ட ரீதியாகவும் மனிதாபிமான முறையிலும் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மாண்புமிகு ஆளுநரை சந்தித்து, எழுவர் விடுதலையில் மனிதாபிமான அடிப்படையில் முடிவு எடுக்க வலியுறுத்தி உள்ளதாகவும், திமுகவின் வலியுறுத்தலால் இயற்றப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை சுட்டிக்காட்டி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் இதுகுறித்து நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மு.க ஸ்டாலினுடன் திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் ஆளுநரை சந்தித்துள்ளனர்.
மாண்புமிகு ஆளுநரைச் சந்தித்து எழுவர் விடுதலையில் மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க வலியுறுத்தினோம்.
திமுக-வின் வலியுறுத்தலால் இயற்றப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறோம். #ReleasePerarivalan விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்! pic.twitter.com/lNy7B1jRqg
— M.K.Stalin (@mkstalin) November 24, 2020