நிவர் புயல் அச்சம் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் காரணமாக தமிழகத்தின் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கடுமையான மழை பதிவாகி வருகிறது.
இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிவர் புயல் தொடர்பாக உதவிகளை மேற்கொள்ள சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பார்வையிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை வழங்கப்படுகின்றதாக தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு மாத்திரம் வெளிச்செல்ல அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலமாக மாறும் அபாயம் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் புதுவையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.