இந்தியாவின் ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில பாகிஸ்தானை தளமாக கொண்ட ஜய்ஸ் ஈ முகமட் அமைப்பினர் கடந்த வாரம் மேற்கொள்ளவிருந்த தாக்குதலொன்று முறியடிக்கப்பட்டமை குறித்து இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் குழுவிற்கு மத்திய அரசாங்கம் தகவல்களை வழங்கியுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா உட்பட தெரிவு செய்யப்பட்ட நாடுகளை சேர்ந்த தூதுவர்களிடம் மத்திய அரசாங்கம் இந்த தாக்குதல் குறித்து தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டங்கள் ஆயுதங்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் உட்பட சகல விபரங்களும் அடங்கிய ஆவணமொன்றை வெளிநாட்டு தூதுவர்களிற்கு மத்திய அரசாங்கம வழங்கியுள்ளது.
இந்தியா வழங்கிய இந்த ஆதாரங்கள் இந்த தாக்குதல் திட்டத்தில் பாகிஸ்தானிற்கு உள்ள தொடர்பினை வெளிப்படுத்தும் விதத்தில் காணப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஸ்மீரின் சம்பா பகுதி ஊடாக எவ்வாறு சுரங்கப்பாதைகளை அமைத்து தீவிரவாதிகள் இந்தியாவிற்கு ஊடுருவினார்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ள மத்திய அரசாங்கம், புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் ஆயுதங்கள் காணப்படும் குறியீடுகள் இந்த தாக்குதல் திட்டத்தில் பாகிஸ்தானிற்கு தொடர்புள்ளதை வெளிப்படுத்தியுள்ளன என்பதையும் இந்தியா தெரிவித்துள்ளது.
நவம்பர் 20 ம் திகதி ஜம்மு காஸ்மீரில் உள்ள பாதுகாப்பு படையினர் பாரிய தாக்குதல் திட்டமொன்றை முறியடித்துள்ளனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.