முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் கைதியான பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள மேலும் ஒரு வாரம் பிணை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன்,சிறுநீரக தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே அவரின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவருக்கு 90 நாட்கள் ‘தற்காலிக சிறை விடுவிப்பு’ வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் 30 நாட்கள் மட்டும் ‘தற்காலிக சிறைவிடுவிப்பு’ வழங்கி உத்தரவிட்டது. இந்த தற்காலிக சிறைவிடுவிப்பு கடந்த நவம்பர் 9ஆம் திகதி முடிவடைந்தது.
இதற்கிடையில் பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் தற்காலிக சிறைவிடுவிப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் அற்புதம்மாள் மனுசெய்திருந்தார்.
அந்த மனுவில் பேரறிவாளன் உடல்நலக் குறைவால் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அவரது தந்தைக்கும் உடல்நிலை மிக மோசமான நிலையிலுள்ளதாக தெரிவித்திருந்தார்.
விசாரணையில் பேரறிவாளனுக்கு மேலும் இரண்டு வாரங்கள் தற்காலிக சிறைவிடுவிப்பு நீடித்து உத்தரவிடப்பட்டது.
இந்த தற்காலிக சிறைவிடுவிப்பு காலம் முடிவடையவுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு வாரத்திற்கு தற்காலிக சிறை விடுவிப்பு நீடிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளனுக்கு வழக்கப்பட்ட பிணை நவம்பர் 9ஆம் திகதியில் இருந்து நவம்பர் 23ஆம் திகதி வரை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் இதற்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.