July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதை தமிழக ஆளுநர் இனிமேலும் தாமதிக்ககூடாது’

எழு பேர் விடுதலையில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் இனிமேலும் சாக்கு போக்குகளை தெரிவிக்காமல் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவான குரல்கள் தமிழகத்தில் மீண்டும் ஒலிக்கதொடங்கியுள்ள நிலையிலேயே திருமாவளவன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதில் தங்களுக்கு மறுப்பு ஏதுமில்லை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கூறிய பிறகும் பேரறிவாளன் விடுதலையைத் தாமதிப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆளுநர் அவமதிப்பதாகவே பொருள்படும்.

இனியும் சாக்குபோக்கு சொல்லாமல் இன்றே தமிழக அரசின் கோரிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

பேரறிவாளன் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது எம்.டி.எம்.ஏ அறிக்கையை எதிர்பார்த்து ஆளுநர் காத்துக் கொண்டிருப்பதாகவும் அதனால் தான் இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

நேற்று சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் “எம் டி எம் ஏ விசாரணைக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை; விடுதலைக்கு ஒப்புதல் அளிப்பதா இல்லையா என்பதை ஆளுநர்தான் முடிவெடுக்கவேண்டும்” என சிபிஐ அந்த பிரமாணப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

சிபிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த பிறகும் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் தாமதித்தால் அவர் செய்வது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும்.

நாளை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் சூழலில் ஆளுநர் இன்றே இது தொடர்பாக முடிவெடுத்து ஒப்புதலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழக முதல்வர் ஆளுநரிடம் இதை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.