தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், பாஜகவிற்கு, 25 தொகுதிகளை வழங்க, அதிமுக. முன் வந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 2 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமித் ஷாவிடம் முதலமைச்சர் பழனிச்சாமி வழங்கினார்.
இதன்போது பாஜக சார்பில் 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் கேட்டதாகவும் அதற்கு 25 தொகுதிகளை ஒதுக்க அதிமுக விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பிற்கு பிறகு தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி ரவி, மூத்த தலைவர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு, கௌதமி, நமீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கு, கட்சியினரை தயார் செய்வது, அ.தி.மு.க., கூட்டணி உறுதியாகி இருப்பதால், எதிர் கூட்டணியை தோற்கடிக்க, வியூகம் அமைப்பது, மக்களை சந்தித்து, அரசின் திட்டங்களை எடுத்துரைப்பது போன்றவை குறித்து ஆலோசித்துள்ளனர்.
மேலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்து பேசி முடிவு செய்துவிட்டு அதன்பின்னர் பாஜகவுக்கான தொகுதிகள் பற்றி முடிவு செய்யப்படும் என அதிமுக கூறியதாக தெரிகிறது.
அதேசமயம் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் என்பதை அதிமுக குழுவினருடன் பேசி முடிவு செய்துகொள்ளும்படி பாஜக மாநில நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.