January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் மொழி’; அமித் ஷா

தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து உரையாற்றியபோது உலகிலேயே தொன்மை மொழியான தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என தமிழகத்தில் பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அமித் ஷா தமிழ் மொழி குறித்து பேசியுள்ளார்.

மேலும் தமிழகத்தின் பாரம்பரியமும் கலாசாரமும் மிகவும் தொன்மையானது எனவும் அவர் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

“தமிழகத்தின் கலை, அறிவியல் சுதந்திரத்திற்கான பங்களிப்புக்கு தலைவணங்குகிறேன். நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா மீட்பு விகிதம் அதிகம்.கொரோனா தொற்றுக்கு எதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தைப் போல கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வேறு எந்த மாநிலத்திலும் எடுக்கப்படவில்லை” என்று அமித் ஷா  கூறினார்.

தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களையும், சலுகைகளையும் பட்டியலிட்டுக் காட்டினார்.

‘குடும்பக் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டிவருகின்றனர்’

எதிர்கட்சியான திமுகவையும் அவர் விட்டுவைக்கவில்லை. தமிழகத்திற்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளதாக திமுக தலைவர்கள் குற்றம்சாட்டியதை மனதில் வைத்து அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் .

முன்னர் மத்தியில் ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்திலும் தமிழகத்திற்கு திமுக என்ன செய்தது என அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். 13- 14 ஆம் நிதியாண்டு காலத்தில் மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழகத்திற்கு 11,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததாகவும் ,ஆனால் கடந்த நிதி ஆண்டில் தமிழகத்திற்கு மோடி அரசு 32 ,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உள்ளதாகவும் அவர் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

சென்னைக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு வந்துள்ளதால் அரசியல் குறித்து பேச விரும்புவதாக கூறியுள்ள உள்துறை அமைச்சர், தமிழ்நாட்டு மக்களுக்கு மோடி அரசு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார் .

“ஊழல், குடும்ப அரசியல், சாதி அரசியலுக்கு எதிராகவே மோடி வெற்றி கண்டுள்ளார். மேலும் குடும்ப அரசியல் நடத்தி வரும் சில கட்சிகளுக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டி வருகின்றனர். அதையே முன்மாதிரியாக வைத்து தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு ஊழலுக்கு எதிராக பேச என்ன அருகதை இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டை வைக்கும் முன்னால் தங்களின் கடந்த காலத்தை சிலர் திரும்பிப் பார்க்க வேண்டும்” என்றும் கூறினார் அமித் ஷா.

ஏழைகள் நலனில் மோடி அரசு அக்கறை செலுத்தி வருவதாகவும், இதனால் உலக நாடுகள் இந்தியாவைப் பார்க்கும் கண்ணோட்டத்தை மோடி மாற்றி அமைத்துள்ளதாகவும் கூறிய உள்துறை அமைச்சர், இலங்கையில் யாழ்ப்பாணம் சென்ற மோடி வீடுகளை இழந்த தமிழர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தை செயல்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.