January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் விஜயம்

photo: Facebook/ Amit Shah

இந்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா இன்றைய தினம் தமிழகம் விஜயம் செய்துள்ளார்.

பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன், மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி, பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அமித் ஷாவுக்கு வரவேற்பளித்துள்ளனர்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்ட அமித் ஷா, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ. 380 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்துள்ளார்.

மேலும், ரூ. 61,843 கோடி மதிப்பிடப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்ட பணி உட்பட பல்வேறு திட்டங்களுக்குமான அடிக்கல் நாட்டு விழாக்களில் கலந்துகொண்டுள்ளார்.

அமித் ஷாவுக்கு  எதிராக இணைய எதிர்ப்பு

இந்நிலையில், தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமித் ஷாவுக்கு எதிராக ட்விட்டரில் பரவிய “கோ பேக் அமித்ஷா” (#GoBackAmitShah) எனும் ஹேஷ்டேக் மிக வேகமாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இந்தியாவில் தற்போது டிரென்டிங்கில் உள்ள பிரதான அரசியல் ட்விட்டர் செய்தியாக “கோ பேக் அமித்ஷா” காணப்படுகின்றது.

பாஜகவின் முக்கிய தலைவர்கள் தமிழ் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் “கோ பேக்” ஹேஸ்டேக் ட்விட்டரில் முன்னிலைப் பெறுவது வழமையானது.

அதேபோன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி விஜயத்தின் போதும் பல தடவை “கோ பேக் மோடி” (#GoBackModi) எனும்  ஹேஷ்டேக் ட்விட்டரை ஆக்கிரமித்துள்ளது.

“கோ பேக் அமித் ஷா” ஹேஸ்டேக்கினை பயன்படுத்தி பலர் அமித் ஷாவின் தமிழக விஜயத்திற்கான எதிர்ப்பினையும், பாஜகவிற்கு எதிரான எதிர்ப்பினையும் பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் நாடு பெரியாரின் மண், சுய கௌரவமிக்க நிலம், காவியுடையணிந்த இனவெறி குற்றவாளியை வரவேற்பதற்கு இது குஜராத் இல்லை” என பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

நாட்டின் அதிகாரம் மிகுந்த உள்துறை அமைச்சரான அமித் ஷா, 2021 சட்டப்பேரவை தேர்தல் வியூகம் குறித்தும் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

இவ்வேளையில், இணையதள வாசிகளின் இந்த ட்ரெண்ட்டிங் போராட்டம், அரசியல் பார்வையாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த ஹேஷ்டேக்குகளுக்குப் போட்டியாக பாஜக தொண்டர்கள் (#TNWelcomesAmitShah #TNWelcomesChanakya)  ஆகிய ஹேஷ்டேக்குகளைக் கொண்ட பதிவுகளை ட்விட் செய்துவருகின்றனர்.

அமித் ஷாவின் ட்விட்டர் செய்தி

அமித்ஷா தமிழகம் வந்தடைந்ததையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை வந்தடைந்தேன்! தமிழ்நாட்டில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே.

இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழ் நாட்டின் சகோதர, சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அமித் ஷா மீது பதாகை வீச முயற்சி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகையின் போது, விமான நிலையத்தில் அவருக்கு பலத்த பாதுகாப்புடன் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர், அப்பகுதியில் திரண்டிருந்த பாஜக தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாரே நடந்து சென்றார்.

அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர், பதாகைகளை அமித் ஷாவை நோக்கி வீசியுள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளதோடு, சம்பவத்தின்போது அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.