November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய தலைவர்களை அவமதித்துள்ளார் பராக் ஒபாமா: சட்டத்தரணி கியான் பிரகாஷ் வழக்கு தாக்கல்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது அரசியல் வாழ்க்கைப் பற்றிய நூலில் இந்தியத் தலைவர்களை அவமதித்துள்ளார் என இந்திய சட்டத்தரணியொருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அண்மைக்கால அரசியல் வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாராக் ஒபாமா‘எ பிராமிஸ்ட் லேண்ட்’ (‘A Promised Land’) என்ற பெயரில் புத்தகமொன்றை இரு பகுதிகளாக எழுதுகின்றார். அதில் ஒரு பகுதி விற்பனைக்கு வெளியிடப்பட்டது.

 

இந்த புத்தகத்தில் ஒபாமாவின் இளமைக்கால வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, அரசியல் நிகழ்வுகள், தனது பதவிக்காலம், சந்தித்த உலகத்தலைவர்கள், கட்சித்தலைவர்கள், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது போன்ற பல்வேறு முக்கிய சம்பவங்களை எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை ஒபாமா விமர்சனம் செய்துள்ளதாக உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த மூத்த சட்டத்தரணி கியான் பிரகாஷ் சுக்லா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உத்தர பிரதேச மாநில பொலிஸார் பராக் ஒபாமாவிற்கு எதிராக எப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்யவேண்டும் என தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து முதலாம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்திய இறையான்மைக்கு எதிராக ஒபாமா கருத்து தெரிவித்துள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், “ஒபாமா மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் அமெரிக்க தூதரகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்” என்றும் சட்டத்தரணி கியான் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மனுவில் இந்தப்புத்தகத்தில் ராகுல் காந்தியை பதற்றமானவர், மற்றவர்களை கவரமுயல்பவர் என வர்ணித்துள்ளார்.

அத்துடன் மன்மோகன் சிங்கினால் தனது மகனிற்கு ஆபத்தில்லை என்பதால் தான் மன்மோகன் சிங்கை பிரதமராக சோனியா காந்தி தெரிவு செய்தார் என ஒபாமா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.