October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்குமாறு தமிழக மீனவர்கள் போராட்டம்

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 19 நாட்டுப் படகுகளையும் விடுவிக்கக்கோரி பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர்.

படகுகளை இழந்த மீனவக் குடும்பங்களும், பெண்கள், குழந்தைகள் மற்றும் மீன்பிடி தொழிற் சங்கத்தினர் உள்ளிட்ட 200இற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பாம்பன், தங்கச்சி மடம், நம்புதாளை உள்ளிட்ட இராமநாதபுரம் மாவட்ட மீன் பிடிக் கிராமங்களைச் சேர்ந்த 19 நாட்டு படகுகளை விடுவிக்க வலியுறுத்தியே பாதிக்கப்பட்ட மீனவர்கள்  பாம்பன் தெற்கு கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இந்தப்போராட்டத்தின் போது கடந்த நான்கு வருடங்களாக இந்திய மத்திய, மாநில அரசுகள் இலங்கை வசமுள்ள படகுகளை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், படகுகளுக்கு நிவாரணமாக தலா 30 இலட்சம் ரூபாவை வழங்குமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில், “இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் இன்று வரை விடுவிக்கப்படவில்லை.

 

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாம்பன் மற்றும் நம்புதாள பகுதியைச் சேர்ந்த ஐந்து படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இரண்டு வருடங்களாகியும் அதை மீட்க இந்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான்கு வருடங்களாக இலங்கை கடற்படை வசம் உள்ள படகுகள் இனி மீட்கப்பட்டாலும் அதனை மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்த முடியாது.

எனவே, ஒவ்வொரு படகையும் நம்பி சுமார் 30 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இலங்கை வசமுள்ள படகுகளை மீட்டுத்தரவேண்டும்.

இல்லையெனில் சென்னை கோட்டையில் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களையும், தமிழ்நாடு நாட்டுப்படகு மீன்பிடி கடல் தொழிற்சங்க அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.