இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்கென பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு மருந்துக் குப்பிகள் தமிழ்நாடு தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு மருந்துகள் கடத்தப்படவிருப்பதாக மண்டபம் கரையோர காவல்படைக்கு நேற்று மாலை கிடைத்த இரகசிய தகவலையடுத்து, ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரையிலான வடக்கு கடற்கரைப் பகுதியில் விசேட தேடுதல்கள் நடத்தப்பட்டன.
இதன்போது, தங்கச்சிமடம் வடக்கு கடற்கரை பகுதியில் முள் புதர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மருந்து குப்பிகள் மீட்கப்பட்டுள்ளன.
1200 அட்டைகளில் சுமார் 6000 மருந்து குப்பிகள் இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்து குறித்து மருத்துவத்துறையினரிடம் விசாரித்த போது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும் மருந்து வகையை சேர்ந்தது என்று தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு இந்த மருந்து கிடைப்பது மிகவும் கடினமானது என்பதால் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்துவதற்காக அந்த இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.