November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகம் வரும் அமித் ஷா: கதி கலங்கும் அரசியல் கட்சிகள்

பாஜகவில் இரட்டை குழல் துப்பாக்கி என்றால் அது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான்.

அமித் ஷா ஒரு மாநிலத்திற்கு வருகிறார் என்றால் அங்கு அடுத்து வரும் மாதங்களில் அதிரடியாக ஏதாவது மாற்றங்கள் நடக்கப்போகிறது என்றுதான் அர்த்தம். எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல கூட்டணிக் கட்சிகளுக்கும் கூட இவரை கண்டால் உள்ளூர ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது.

பீகாரில் தன் கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளையும் மோதவிட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக இடங்களை பெற்று தந்ததில் இவரின் பங்களிப்பு முக்கியமானது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து.

பீகாரில் நிதிஷ்குமார் முதல்வராக தொடர்ந்தாலும், முன்புபோல தன்னிச்சையாக எந்த முடிவையும் அவரால் எடுக்க முடியாது. காரணம் என்னவெனில் நிதிஷ்குமாரின் கட்சியைக் காட்டிலும் பாஜக அதிக இடங்களை பிடித்து இருக்கிறது. இனி எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டுமானாலும் அது அமித்ஷாவின் கண்ணசைவு இல்லாமல் நடக்காது .

இத்தகைய அரசியல் நிகழ்வுகள் தான் இந்தியா முழுவதும் இருக்கின்ற எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா  மேல் ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்சமயம் இவருடைய பார்வை மேற்கு வங்கத்தின் மீதும் தமிழகத்தின் மீதும் இருக்கிறது.

21ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். காரணம் என்னவோ மெட்ரோ ரயில் மற்றும் மேம்பால திட்ட அடிக்கல் நாட்டு விழா, தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பது என அரசு சார்பான திட்டங்களுக்கு வருவதைப் போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும் கூட, மிக முக்கியமாக, வரும் சட்டமன்ற தேர்தலில் பீகாரை போன்று அதிரடியான ஒரு ஆட்டத்தை ஆடி தமிழக சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்பதே நோக்கம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள் .

அமித் ஷா நவம்பர் 21 வருகிறார் என்றால் நவம்பர் 20ஆம் தேதி அதிமுகவின் முக்கிய தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. மற்றொரு புறம் சசிகலா சிறையிலிருந்து எந்த நேரத்திலும் விடுதலையாவார் என ஒரு தகவலும் இருக்கிறது.

அதேநேரம் திமுகவும் அமித் ஷாவின் வருகையை பார்த்து தங்களுடைய திட்டங்களை வகுக்க தொடங்கியிருக்கிறார்கள்.

ஆகவே அமித் ஷாவின்  வருகைக்கு பின்பு தான் தமிழக அரசியலில் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்குள் நடக்கும் அதிரடி மாற்றங்களை காணப்போகிறோம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

திமுகவைப் பொறுத்தவரை பாஜக எதிர்ப்பு அரசியலை என்றோ தொடங்கி விட்டார்கள். அடுத்து அதிமுக என்ன செய்யும் என்பது அமித் ஷா வந்து போன பிறகே தெரியும்.