February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய படைவீரர்களுக்கு எதிராக சீனா ‘நுண்ணலை ஆயுதத்தை’ பயன்படுத்தியதா?

(file photo: ADGPI – Indian Army)

இந்திய படைவீரர்களிற்கு எதிராக சீனா நுண்ணலை ஆயுதத்தை பயன்படுத்தியதா என்ற கேள்வி சர்வதேச அளவில் பாதுகாப்பு வட்டாரங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்திய இராணுவ வீரர்களை பலவந்தமாக நோயாளிகளாக்கி அவர்களை பின்வாங்கச் செய்வதற்காக சீனா தனது நுண்ணலை ஆயுதங்களை பயன்படுத்தியது என சர்வதேச போரியல் நிபுணர் ஜின் கன்ரோங் என்பவர் தெரிவித்துள்ளார் என லண்டனிலிருந்து வெளியாகும் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஆயுதம் மலை உச்சியை மைக்ரோவேவ் ஒவன் போன்று மாற்றியது என அவர் தெரிவித்துள்ளார்.

இது இந்திய படையினர் வாந்தியெடுக்கும் நிலையை உருவாக்கியது என சர்வதேச போரியல் நிபுணர் ஜின் கன்ரோங் தனது மாணவர்களிற்கு தெரிவித்துள்ளார்.

சமையலறையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் போல குறிப்பிட்ட ஆயுதம் நீர்மூலக்கூறுகளை சூடாக்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆயுதம் மனித தோலிற்குள் உள்ள நீரை இலக்குவைத்து கடும் வலியை ஏற்படுத்துகின்றது என டைம்ஸ் தெரிவித்துள்ளது.

நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துவது இந்த ஆயுதத்தின் நோக்கமில்லை என தெரிவித்துள்ள டைம்ஸ், எனினும் இந்த ஆயுதம் கண்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம், புற்றுநோயை உருவாக்கலாம் என்ற கரிசனை காணப்படுகின்றது எனவும் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த ஆயுதம் இந்திய படையினர் லடாக் எல்லையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளாமல் பின்வாங்க செய்வதற்கு உதவியது என ஜின் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஆயுதத்தை ஆகஸ்ட் மாத இறுதியில் சீனா பயன்படுத்தியது. இந்த ஆயுதத்தை பயன்படுத்தி 15 நிமிடங்களில் இந்திய படையினர் வாந்தியெடுக்க தொடங்கினர் என அவர் தெரிவித்துள்ளார்.