தமிழகத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை தொடர்வதற்கு மாநில அரசு தீர்மானித்துள்ள அதேவேளை,பத்து வகையான தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பள்ளிகள் (9, 10, 11, 12 ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியன நவம்பர் 16 ஆம் திகதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துச் சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மேலும், சின்னதிரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அமைய ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு உட்பட்டு பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் , வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்துத் திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி நவம்பர் 10 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் நவம்பர் 16 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்கள் பங்கேற்கும் வகையில் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு அதிகரிக்காமல், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு அதிகரிக்காமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.