November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் மறைவு; திரையுலக பிரபலங்கள் இரங்கல்

இந்தியாவின் தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இன்று சென்னையில் காலமாகியுள்ளார்.

மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவர் காலமாகியுள்ளார்.

தஞ்சையில் உள்ள வடசேரியில் 1959 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி பிறந்த அவர், 62 வயதில் உலகை விட்டுப் பிரிந்துள்ளார்.

இவர், இயக்குனர்களான பரதன், வின்சென்ட் செல்வா,கேஆர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்பு, 2003 ஆம் ஆண்டு ‘இயற்கை’ படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் தடம் பதித்தார்.

பொதுவுடமைச் சிந்தனையை தமிழ் சினிமாவில் பிரதிபலித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தவகையில் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன், தன்னுடைய எல்லா படங்களிலும் முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் ஆன ஏற்றத்தாழ்வுகளை மிகச்சரியாக சுட்டிக்காட்டி இருப்பார்.

காதலை வேறு திசைகளில் சொன்னதன் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

அழகாக காதலை சொன்ன இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் திருமணம் செய்து கொள்ளவில்லை.

காதலைச் சொல்லும் ஒரு இயக்குனர் என்று நாம் நினைத்திருந்த வேளையில் ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடமை ஆகிய படங்களை இயக்கி பொதுவுடமைச் சித்தாந்தங்களை புதியவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் அழகாக படமாக்கினார்.

பூலோகம் என்ற படத்திற்காக வசனகர்த்தாவாகப் பணியாற்றினார் இயக்குனர் எஸ்பி ஜனநாதன். இந்த படத்தை இயக்கியது இவரிடம் உதவியாளராக இருந்த கல்யாண் என்பவராவார்.

எஸ்.பி. ஜனநாதன் இறுதியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து லாபம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது.

இவர் இயக்கிய இயற்கை என்ற முதல் படத்திற்கு தேசிய விருது கிடைக்கப் பெற்றது.

ஷ்யாம், அருண் விஜய், ஜீவா, ஜெயம் ரவி, ஆர்யா, சேதுபதி, குட்டி ராதிகா, நயன்தாரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய நடிகர் நடிகைகளை தன்னுடைய படத்தில் நடிக்க வைத்து அவர்களிடமிருந்து புது விதமான நடிப்புத் தன்மையை வெளிப்படுத்தியிருந்தார்.

இவரின் மறைவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் உள்ளார்ந்த உண்மையான வருத்தத்தை வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த வகையில் ஐ லவ் யூ சார் என்று விஜய் சேதுபதியும், ‘எங்களிடம் இருந்து உங்கள் நினைவுகளை பிரிக்க முடியாது’ என்று ஜெயம் ரவியும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ‘சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை உங்கள் திரைப்படம் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும், உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இயக்குனர் மோகன் ராஜா ‘என் நெஞ்சம் நொறுங்கி விட்டது, எனக்கு உத்வேகம் அளித்த ஒரு மனிதர். இவர் நினைவுகள் எப்போதும் எனக்குள் இருக்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் மறைவு குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் குறிப்பிடுகையில், ‘கனத்த இதயத்துடன் உங்களுக்கு குட் பை சொல்கிறேன் சார், உங்களுடன் பணியாற்றியது ஒரு சிறப்பான அனுபவம். நீங்கள் எனக்கு வழங்கிய அறிவுக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் எனது நன்றிகள், நீங்கள் எப்போதும் என் நினைவில் இருப்பீர்கள். உங்களைப் பிரிந்து வாடும் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், ‘தனித்துவமான திரைப்படங்கள் மூலமாக எஸ்.பி. ஜனநாதன் என்றுமே வாழ்ந்து கொண்டிருப்பார்’ என தனது இரங்கல்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.

https://twitter.com/ARMurugadoss/status/1371015578333237249?s=20