இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் லோக் சபாவில் (மக்களவை) மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டமூலங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
விவசாயிகள் உற்பத்தி வணிக மசோதா, விலை உறுதி மற்றும் பண்ணைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்த மசோதா ஆகிய மூன்று சட்டமூலங்களே மக்களவையில் நிறைவேறியுள்ளன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.விவசாயிகள் உற்பத்தி வணிகச் சட்டம் விவசாயிகள் பெருநிறுவனங்களுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்துகொள்ள வழிவகுக்கின்றது.
இதன் காரணமாக கோப்பரேட் என அழைக்கப்படும் பெரு நிறுவனங்களின் வருகையும் ஆக்கிரமிப்பும் ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையால் விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொள்வார்கள் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அகாலிதளம் கட்சி இந்த விவகாரத்தில் பாஜகவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், இந்த மசோதாக்கள் மேலவையான ராஜ்ய சபாவிலும் நிறைவேறும் என்று ஆளும் பாஜக நம்புகின்றது.“இந்த வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் நாட்டின் விவசாயிகள் எந்தளவுக்கு தெளிவானவர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிள்ளார்.