November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ள ரஜினி – துக்ளக் குருமூர்த்தி சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி இடையில் இன்று மாலை இடம்பெற்றுள்ள சந்திப்பு தமிழக அரசியலில் ஊகங்களை கிளப்பிவிட்டுள்ளது.

ரஜினியின் வீட்டில் சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பின் நோக்கம் வெறும் ‘சுகநலன் விசாரிப்பு’ மட்டுமே என்று குருமூர்த்தி கூறியுள்ளார்.

ஆனால், அண்மைய நாட்களாக ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வெறு வதந்திகளும் ஊகங்களும் வெளியாகி வருகின்ற நிலையில்,  தீவிர பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவரான துக்ளக் ஆசிரியர் அவரை சந்தித்துள்ளமை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் குறித்து வெளியான அறிக்கை; மறுப்பு வெளியிட்டுள்ள ரஜினி

ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வெளியான கடிதம் தமிழக ஊடகங்களில் பேசுபொருளாக அமைந்திருந்தது.

“2011 இல் சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூரில் அளிக்கப்பட்ட சிகிச்சை, 2016 இல் அமெரிக்காவில் நடந்துள்ள சிறுநீரக-மாற்று அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் நோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த கொரோனா காலத்தில் என்னை அரசியலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்” என்று ரஜினிகாந்த் எழுதியுள்ளதைப் போன்ற கடிதமே வெளியாகியிருந்தது.

ஆனால் இந்தக் கடிதம் போலியானது என்றாலும் அதில் மருத்துவர்கள் சொன்னதாக உள்ளத் தகவல் உண்மையானது என்று தனது டுவிட்டரில் பின்னர் தெரிவித்திருந்தார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு பேசி தனது அரசியல் திட்டம் பற்றி தகுந்த நேரத்தில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பற்றி கருத்து வெளியிட்டிருந்த அரசியல் ஆர்வலர்கள், ரஜினிகாந்த் இனிமேல் தீவிர அரசியலுக்கு வருவது சந்தேகமே என்று கூறியிருந்தனர்.

இந்தப் பின்னணியிலேயே, ஆளும் பாஜகவின் அதிகார மையத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள துக்ளக் குருமூர்த்தி ரஜினிகாந்தை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.