January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணொளி: ‘விஜய் சேதுபதி முரளியாக நடிக்கக் கூடாது’- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பதிலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிக்கொள்ள வேண்டும் என்று வடக்கு-கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியிருந்த குறித்த சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

லீலாதேவி ஆனந்தநடராஜா

2013- இல் பிரித்தானிய பிரதமராக இருந்த டேவிட் கேமரன் இலங்கை வந்திருந்த போது, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தியிருந்த போராட்டம் தொடர்பில் முரளிதரன் சர்வதேச ஊடகங்களுக்கு தவறான தகவலை வழங்கியிருந்ததாக லீலாதேவி ஆனந்தநடராஜா கூறினார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘800’ என்ற படத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தமான நாள் முதல், பல்வேறு தரப்பிலிருந்தும் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன.

இதனிடையே, தனது கருத்துக்கள் அரசியல் காரணங்களுக்காக திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக முத்தையா முரளிதரன் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.