October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி காலமானார்

உலகின் புகழ்மிக்க இயக்குனர்களில் ஒருவரான சத்யஜித்ரே இயக்கிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற சௌமித்ர சட்டர்ஜி,வயது மூப்பு மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக கொல்கத்தாவில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று காலமானார்

இந்திய சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவரான சௌமித்ரா சாட்டர்ஜி, ஏராளமான வங்காள மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1959 ஆம் ஆண்டில் அப்புவின் உலகம் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அவர் முதன்முதலில் அடியெடுத்து வைத்தார்.இவர் நடித்ததில் மிகவும் பிரபலமான படம் சாருலதா.சத்யஜித்ரே இயக்கிய ஆரணிய தீன் ராத்ரி, கணசத்ரு , ஆஷனி சங்கர் ,சந்தீப் ,ஷாகா புரோஷாகா உள்ளிட்ட பல பெங்காலி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

புகழ் பெற்ற பொலிவூட் நடிகை ஷர்மிலா தாகூர் உடன் இணைந்து ஆரணிய தின் ராத்திரி , பர்னாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் இருவரும் பெங்காலி ரசிகர்களிடையே புகழ்மிக்க ஜோடிகளாக விளங்கினர்.

ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆன சௌமித்ரா சாட்டர்ஜி சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார் .

2012 ஆம் ஆண்டில் இ்ந்திய திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார் . 2004 ஆம் ஆண்டில் மத்திய அரசின் பத்மபூஷண் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ள அதேவேளை,இந்தியப் பிரதமர் மோடி, பல படங்களின் மூலம் மேற்கு வங்கத்தின் உணர்வுகளை காட்சிப்படுத்தியது சௌமித்ரா சாட்டர்ஜியின் புகழ் ஓங்கக் காரணம் என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

நீண்டகால நோயின் தாக்கத்தினால் அவரின் உயிர் பிரிந்ததாக கொல்கத்தா மருத்துவமனை அறிவித்திருக்கிறது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் சௌமித்ரா சாட்டர்ஜியின் மறைவு பெரும் இழப்பு என்றும் அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.