கனவுகளை நனவாக்கும் பைத்தியக்காரத்தனத்தை மனதில் கொண்டிருக்கும் தொழில்முனைவோர் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா தனது அபரிமிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக இந்தப் படத்தின் ரியல் ஹீரோவான எயார் டெக்கான் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் இது போன்ற படங்கள் மக்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது எனவும் அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
தன் மனைவியாக சித்தரிக்கப்பட்டுள்ள அபர்ணா பாலமுரளி சரியான தேர்வு என்றும் தனக்கென்ற கனவுகளுடன் கூடிய பெண் என அவர் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
வலிமையான அதேநேரம் மென்மையான பெண் என்றும் அச்சமில்லாத ஒரு கிராமப்புற பெண்ணாக மற்ற பெண்களுக்கு உத்வேகமாக இருந்த தனது பழைய ஞாபகங்களை பதிவிட்டிருக்கிறார் .
இந்த படத்தில் நாடகத்தன்மை இருந்தாலும் பெரும் முரண்பாடுகளுடன் கூடிய பின்தங்கிய கிராமப்புற பின்னணியைக் கொண்ட தொழில் முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கைக்கு உண்மை சேர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சூரரை போற்று திரைப்படத்தில் நிறைய கற்பனைகள் இருந்தாலும் தன்னுடைய புத்தகத்தின் மையக்கருவை அற்புதமாக படம் பிடித்து உள்ளதாக அவர் வாழ்த்தியுள்ளார்.
இந்தப் படத்தை பார்க்கும் போது பழைய நினைவுகளால் குடும்ப காட்சிகளில் சிரிப்பையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை என அவர் உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கியவர் தான் ஜி ஆர் கோபிநாத். தன்னுடைய வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள சூரரைப்போற்று படத்தை பார்த்துவிட்டு அவரே இந்த கருத்துக்களை தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.