
நடிகர் விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் ஆரம்பித்துள்ள கட்சியிலிருந்து தான் விலகுவதாக விஜயின் தாயார் சோபா அறிவித்துள்ளார்.
விஜயின் தாயார் இன்று ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அந்த பேட்டியில் மேலும் தெரிவித்ததாவது;
சங்கம் தொடங்குவதாகவே என்னிடம் சந்திரசேகர் கையெழுத்து பெற்றார்.கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை. அரசியல் பற்றி பேச வேண்டாம் என தந்தையிடம் விஜய் கூறியிருந்தார்.
ஆனால் அவர் கேட்கவில்லை. விஜய் தனது அப்பாவுடன் பேசி பல ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் தொடங்கிய கட்சியில் இருந்தும் பொருளாளர் பதவியிலிருந்தும் நான் விலகிவிட்டேன் என்று அவர் தெரிவித்தார்.
தனது தந்தை தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகர் விஜய் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டுள்ளது என விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சியாக விஜய் மக்கள் இயக்கத்தை பதிவு செய்வதற்கும் விஜய்க்கும் எந்த தொடர்புமில்லை என சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.