November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும்,

இதன்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்திருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இறக்கும் போது மயில்சாமிக்கு 57 வயதாகும்.

நடிகன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்ட மயில்சாமி, 1984ஆம் ஆண்டு தாவணி கனவுகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து என் தங்கச்சி படிச்சவ, அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பினனர் ரஜினிகாந்துடன் பணக்காரன், உழைப்பாளி படத்திலும் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் வெற்றி விழா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
விஜயகாந்துடன் சின்னகவுண்டர், சத்யராஜுடன் வால்டர் வெற்றிவேல் படங்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய்யுடன் கில்லி, அஜித்துடன் ஆசை, வேதாளம், வீரம், விக்ரமுடன் தூள் படத்திலும், ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா படத்திலும் நடித்துள்ளார்.

இவர் இதுவரை 200 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக நெஞ்சுக்கு நீதி, வீட்ல விசேஷங்க, லெஜண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இவரின் இறுதிக் கிரியைகள் பெப்ரவரி 20 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.