இந்திய திரையுலகின் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் காலமானார்.
கொல்கத்தாவில் நேற்று இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது கீழே விழுந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேரளாவை சேர்ந்த 53 வயதான கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், இந்திய திரையுலகில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் மூலம் அறிமுகமானார்.
மேலும் யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் இசையிலும் தமிழில் அவர் பாடியுள்ளார்.
50ற்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களை பாடியுள்ள கிருஷ்ணகுமார், மன்மதன் படத்தில் ”காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்” கில்லி படத்தில் ‘அப்படி போடு’, காக்க காக்க படத்தில் உயிரின் உயிரே உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.
கிருஷ்ணகுமாரின் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.