November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூப்பர் ஸ்டாருக்கு 71 வயது: கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கேக் வெட்டி  கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் துணை கதாப்பாத்திரமாக அறிமுகமாகி கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவின் மிக முக்கியமான நடிகராகவும், அதிகமாக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் உயர்ந்தவர்தான் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்.

“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்” என்ற அவரது பாடல் அவருக்கே பொருந்தும். அந்த அளவுக்கு இந்த வயதிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை கட்டிவைத்து இருக்கிறார் அவர்.

அவரது 71 ஆவது பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் பெரும் உற்சாகத்தோடு இம்முறை கொண்டாடுகிறார்கள்.

ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளின்போது அவரது ரசிகர்கள் சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்பு திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு சில ரசிகர்கள் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினர்.

மேலும் சில பகுதிகளில் ரசிகர்கள் அன்னதானம் உள்ளிட்டவற்றிற்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் #HBDSuperstarRajinikanth மற்றும் #Thalaiva ஆகிய ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரு நடிகனாக அறிமுகமானது முதல் சமீபத்தில் ரிலீசான படங்கள் வரை தமிழ்த் திரையுலகில் எப்போதுமே அவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்.

இந்த ஆண்டு பிறந்தநாள் ரஜினிகாந்திற்கு நல்ல திருப்புமுனையாக அமையட்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்துகின்றனர்.

1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் ஆரம்பித்து 2021 அண்ணாத்த முடிய சற்றேறக்குறைய 168 படங்களில் நடித்திருக்கும் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் என்ற நிலையைக கடந்து முதல்வர்களை உருவாக்குபவர் அல்லது முதல்வராக வர வேண்டியவர் என்ற கோணத்தில் அவருடைய ரசிகர்களாலும் அரசியல்வாதிகளாலும் தமிழக மக்களாலும் எதிர்பார்க்கப்படுபவர்.

ஆனால் அவரோ இவை அனைத்துக்கும் மென்மையான சிரிப்பை மட்டுமே பதிலாக தந்து கடந்து சென்று விடுவார்.

இவரை வைத்து தமிழக அரசியல் என்றுமே இயங்கிக் கொண்டிருக்கும். ஆனாலும் இவர் அரசியலை விட்டு சற்று ஒதுங்கியே இருந்துள்ளார்.

தான் ஒரு நடிகன் என்ற நிலையை இன்றளவும் மறக்காமல் அடுத்தடுத்து படங்களை நடிக்க ஆர்வமாகி நடித்துக் கொண்டிருப்பவர்.

பில்லா ,ஜானி ,முரட்டுக்காளை, நெற்றிக்கண் போன்ற படங்கள் இவருடைய ஸ்டைலையும் அதிரடியும் வெளிப்படுத்தியது என்றால் தில்லுமுல்லு என்ற படம் அவருக்குள் இருந்த மிகச்சிறந்த நகைச்சுவை நடிகரை அடையாளம் காட்டியது.

தமிழ் சினிமாவிற்குள் சுமார் 45 ஆண்டுகாலம் ஒரு முன்னணி கலைஞராக கடந்து வருவதென்றால் இலகுவான விடயமல்ல.

பல தடைகளை தாண்டி, மேடு, பள்ளம் போன்றவற்றை சந்தித்து சூப்பர் ஸ்டார் என்ற அந்த உயர்நிலையை நடிகர் ரஜினிகாந்த் அடைந்தார் என்றால் அந்த உழைப்பு அவரையே சாரும்.

ஆசியாவின் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் அவருடைய சண்டைகளில் ஒரு காமெடியை கலந்து இருப்பார், அதை போன்று தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்பு முழுமைக்கும் ஒரு சிறு காமெடியை எல்லா இடத்திலும் கலந்து இருப்பார்.

ராகவேந்திரர் மற்றும் பாபா இவருக்குள் இருக்கும் பக்தியை வெளிக்காட்டிய திரைப்படங்களாகும்.

பக்தி மற்றும் ஞானமார்க்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் ரஜினிகாந்த். நிறைய ஆன்மீக பயணங்களில் ஈடுபடுபவர்.

ஒரு பேட்டியின்போது தான் சூப்பர் ஸ்டாராக மாறியதற்கு நேரமே முக்கிய காரணம் என்றும் தன்னால் ஒன்றும் நடக்கவில்லை என்பதையும் மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.

இதிலிருந்து இவருடைய தெளிந்த பக்குவப்பட்ட மனதை நம்மால் தெரிந்து கொள்ள இயலும்.

தன்னுடைய ரசிகர்கள் பால் அளவுகடந்த அன்பு வைத்திருந்த ரஜினிகாந்த் அவர்களை ஒரு பொழுதும் தன்னுடைய சுய லாபத்திற்காக பயன்படுத்தியதில்லை.

இவர் நினைத்திருந்தால் ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசிய காலகட்டத்தில் ஒரு கட்சியை ஆரம்பித்து இவரால் மிக எளிதாக முதல்வராக வந்திருக்க முடியும் அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தையும் தமிழக மக்களின் அன்பையும் சம்பாதித்து இருந்தார்.

ஆனாலும் தான் ஒரு கலைஞன் தான் ஒரு நிர்வாகி அல்ல என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து இருந்த காரணத்தினால் எவ்வளவு அழுத்தங்கள் வந்தபோதிலும் இவர் அரசியலுக்குள் வரவே இல்லை.

பல தனியார் திரைப்பட விருதுகள் பிலிம்பேர் விருதுகள் இந்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷண் விருதுகள் சிறந்த திரை ஆளுமைக்கான தாதா சாகேப் பால்கே விருது என அனைத்தையும் பெற்றிருக்கும் ரஜினிகாந்த் இன்னும் இயல்பாகவும் எளிமையாகவும் காட்சி தருகிறார்.

அரசியலில் நிர்வாக காரணங்களில் தன்னால் நல்லது செய்ய முடியாவிட்டாலும் கெடுதல் செய்யக்கூடாது என்ற ஒரு உயர்ந்த சிந்தனையை கொண்டவர் ரஜினிகாந்த்.

ஆகையாலேயே கட்சியை ஆரம்பித்து அரசியலுக்கு வருவதை இவர் முற்றிலுமாக விரும்பவில்லை.

‘கெட்ட பய சார் இந்த காளி’ என்று முள்ளும் மலரும் திரைப்படத்தில் இவர் பேசும் வசனம் நிஜத்தில் அவர் அப்படி அல்ல என்பதை பறைசாற்றும்

இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது 72ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில் அவரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்துக்கு சிறந்த ஆரோக்கியத்தை இறைவன் அருள வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.

மேலும், தனது படைப்பாற்றல் மற்றும் அற்புதமான நடிப்பால் தொடர்ந்து மக்களை மகிழ்ச்சிப்படுத்த எல்லாம், வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அருள வேண்டுமென டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதேபோல் ரஜினிகாந்துக்கு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அவர் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும், நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தியிருக்கிறார் .

அதுமட்டுமல்லாமல் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்கள் சமூகவலைத்தளங்களில் நடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

அதேபோல் இன்னும் அதை விட சற்று அதிகமாக சென்று இந்தியாவின் தலைசிறந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவத்தை மண்ணால் வடிவமைத்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.