January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நான் பார்த்த முதல் முகம் நீ…; வெளியாகியது அஜித்தின் வலிமை பட பாடல்

உலகத்தில் விலை மதிக்க முடியாத பொக்கிஷம் தான் தாய்ப்பாசம்.அந்த தாய்ப் பாசத்தை போற்றும் வகையில் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்கள் வந்திருந்தாலும் சமீபத்திய படங்களில் அது குறைவு என்று சொல்லலாம் .

அந்த வகையில் தற்போது நடிகர் அஜித்குமாரின் வலிமை படத்தில் இருந்து தாய் பாசத்தினை ‍‍போற்றும் வகையில் ஒரு அருமையான, உருக்கமான பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் தன்னுடைய படங்களில் எப்போதுமே சென்டிமென்டாக தாய்க்கு இடம் கொடுப்பார்.

அந்த வகையில் இந்த வலிமை படத்திலும் தாயை போற்றும் வகையில், தாய் பாசத்தை உணர்த்தும் வகையில் உருக்கமான வரிகளில் பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது.

நான் பார்த்த முதல் முகம் நீ…
நான் கேட்ட முதல் குரல் நீ… அம்மா!

என நடிகர் அஜித்குமாரின் குரலில் தொடங்கும் இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆகவே இந்த படத்திலும் தாய்க்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை இந்த பாடல் உணர்த்தி நிற்கின்றது.

வார்த்தைக்கு வார்த்தை தாயின் மகத்துவத்தையும் அன்பையும் உணர்வையும் நமக்காக அவள் வாழ்ந்ததையும் உணர்த்துகிறது.

இந்த அம்மா பாடல், இயக்குனர் விக்னேஷ் சிவனின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் ஆசிரியராக இந்த பாடலை முதன்முதலாக எழுதியிருப்பது தனது தாயை வைத்தே என எண்ணத் தோன்றுகிறது.

சிணுங்கிய போது சிரிக்க வைத்தாய்…
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்…

சிகரங்கள் ஏற சொல்லிக் கொடுத்தாய் ஆவலோடு தான்…

நான் வாழ்ந்த முதல் அறை நீ… நான் விரும்பிய முதல் பெண்ணும் நீ …அம்மா….

என மீண்டும் நாம் அமர முடியாத ஒரே சிம்மாசனம் தாயின் கருவறை தான் என்பதை நிரூபித்திருக்கிறது பாடல் வரிகள்.

மனதை உருக்கும் வகையில், கேட்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில், அம்மாவை நாம் இழந்து விட்டோம் என சிலர் ஏங்கும் வகையில், அவளிடம் நாம் எவற்றை இழந்தோமோ, எவற்றை மறுத்தோமோ அந்த தாய்க்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நினைவலைகளை ஞாபகப்படுத்துகிறது இந்த அம்மா பாடல்.

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் தொடக்கப் பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

போனி கபூரின் தயாரிப்பில் வலிமை திரைப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, பனி, சுமித்ரா, அச்சுந்த் குமார், யோகி பாபு, ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகியுள்ளது இந்த ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ என்ற அம்மாவின் அன்பை பிரதிபலிக்கும் பாடல்.

பாடலுக்கு அருமையான பின்னணி இசையை வழங்கி அனைவரது நெஞ்சிலும் இடம் பிடித்திருக்கிறார் யுவன்சங்கர்ராஜா.

இந்த பாடலுக்கு பாடகர் சித்ஸ்ரீராம் தனது குரலால் உயிரூட்டி இருக்கிறார் .

பாடலுக்கு மேலும் மெருகூட்டும் வகையில் கிராபிக்ஸ் பட வேலைகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

நடிகர் அஜித்குமார் தனது தாயின் காலை அமுக்கி விடுவது, சிறுவயது முதல் கடந்து வந்த ஒவ்வொரு பாதையும் ஞாபகப்படுத்துகிறது இதில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள்.

பாடல் வரிகளுக்கு ஏற்ற வகையில் பின்னணியில் படக் காட்சிகளும் அருமையாக அமைக்கப்பட்டுள்ளன.

குரங்கு தன் குட்டியை காப்பது, யானை தன் குட்டியை அரவணைப்பது போன்ற காட்சிகள் தாயின் பாசத்தை உணர்த்தி நிற்கிறது.

அன்னப் பறவை தன் குஞ்சுகளுக்கு நீந்தக் கற்றுக் கொடுப்பது போன்றும், தாய் மீன் தன் குஞ்சுகளுக்கு இரை தேடுவது போன்றும் வரும் காட்சிகள் தாயானவள் சிறு வயது முதல், நமக்கான துணையை நாம் தேடும் வரையில் அவள் கடந்து வந்த பாதையை ஞாபகப்படுத்துகிறது.

நிச்சயமாக இந்தப் பாடல் கேட்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.தமது பழைய ஞாபகங்களை மீட்டுக் கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை

அம்மா.. என் முகவரி நீ.. அம்மா …
என் முதல் வரி நீ .. அம்மா …என்
உயிரென்றும் நீ அம்மா….

உன் வாசம் வலிமை தரும்.. உன் வார்த்தை வீரம் தரும்…

நீயே எனக்கென பிறந்தாயே…
அனைத்தையும் தந்தாயே …
என் உலகம் நீ என் தாயே…

என வரிக்குவரி தாயையும், தாய்மையின் மகத்துவத்தையும் போற்றும் வகையில் வலிமை படத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த பாடல் வலிமை மிக்க மனங்களையும் வலிக்க வைக்கும்.

இந்தப் பாடலில் காட்டப்பட்டிருப்பது போல, தாய்மையின் குழந்தைத் தனத்தை, குழந்தையாக நாம் இருக்கும் போது தாய் நம் மீது காட்டும் பாசத்தையும், வயது முதிர்ந்து தாய் குழந்தையான போது நாம் அவர் மீது காட்ட வேண்டிய பாசத்தையும் பிரதிபலித்து நிற்கின்றது இந்த பாடலின் இறுதி வரிகள்.

சிறுவயதில் தாய் நமக்கு நிலாவை காட்டுவதும், வயது முதிர்ந்த போது தன் தாய்க்கு நடிகர் அஜித் குமார் நிலாவை காட்டுவதும் தாய்மையின் மகத்துவத்தை உணர்த்தி நிற்கின்றது.

விடுமுறையே இல்லாமல் தாய் வேலை செய்கிறாள்…

இதற்கான காணிக்கையாய் நான் என்னதான் தருவதோ …அம்மா…

என்ற பாடல் வரிகளில் வருவது போன்று , இன்றும் பல குடும்பங்களில் விடுமுறையே இல்லாமல் இறுதிவரை நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாக்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.