November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மாநாடு’: கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்

காதல் இல்லை, டூயட் இல்லை, வழக்கமான ஹீரோயிசம், பஞ்ச் வசனங்கள் இல்லாமல் சிம்புவை வித்தியாசமான பாணியில் களமிறக்கி இருக்கிறது மாநாடு திரைப்படம்.

சிம்புவுக்கு மாநாடு திரைப்படம் ஒரு கம்பேக் என்றே சொல்லப்படுகிறது.

வழக்கமாக படங்களில் வரும், துறுதுறுவென பஞ்ச் டயலாக் பேசும் இளைஞனாக அல்லாமல் அதிலிருந்து மாறுபட்டு ஒரு புதிய கதாபாத்திரத்தில் புதிய தோற்றத்தில் நடித்திருக்கிறார் சிலம்பரசன்.

சிம்புவின் முந்தைய படங்களைப் போன்று ஹீரோயிசத்துக்கான டயலாக்குகள் இல்லை என்றாலும்,
சிம்புவை எவ்வாறு படத்தில் காட்ட வேண்டுமோ, அவரது இமேஜ் எவ்வாறு இருக்க வேண்டுமோ அதை சரியாக செய்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

சிம்பு தனது கதாபாத்திரத்தில் மிகவும் உன்னிப்பாக வேலை செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.படத்தில் இது நமது பழைய சிம்பு தான் என ரசிகர்கள் மெச்சும் அளவிற்கு , நடிப்பில் அசத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் டைம் லூப் படக்கதைகள் வருவது மிகக் குறைவு என்றே சொல்லலாம்.

அந்த வகையில் சிம்புவின் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் நேர்மறையான விமர்சனங்களை நாம் பார்க்க முடிகிறது.

மாநாடு படத்தில் மாநிலத்தின் முதல்வரை யாரோ கொல்வதை டைம் லூப்பில் சிக்கியுள்ள ஒருவர் காப்பாற்ற முயற்சிக்கிறார். இதனை மையக்கருவாக வைத்து படம் நகர்கிறது‌.

படத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சீரான வேகத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு தனது அரசியலை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்.

வெங்கட்பிரபு தல அஜீத் குமாரை வைத்து இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற மங்காத்தாவிற்கு அடுத்ததாக மாநாடு என்று ரசிகர்கள் மெச்சும் அளவிற்கு படத்தை தரமானதாக செய்திருக்கிறார்.

பார்வையாளர்களின் கவனம் சிதறாத வகையில் காட்சிகளுக்குள் காண்போரை சிக்கவைக்கும் வித்தையை அழகாக கையாண்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

கோயம்புத்தூரில் நண்பனுக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக துபாயில் இருந்து வருகிறார் சிம்பு.விமானத்தில் வரும் போது டைம் லூப்பில் சிக்கிக் கொள்கிறார்.

ஏதோ ஒரு விடயம் மீண்டும், மீண்டும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ரிப்பீட் மோடில் திரும்பத் திரும்ப நடந்தால் மனநிலை எப்படி இருக்கும்? இதை புரிந்து கொண்டு அதில் இருந்து எவ்வாறு வெளிவருவது? என நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களை வைத்து வித்தியாசமான டைம் லூப் திரைக்கதையுடன் இந்த மாநாடு படம் உருவாகியுள்ளது.

படத்தில் சிம்புவும் வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவும் ஏட்டிக்கு போட்டியாக நடித்து அசத்தி இருக்கிறார்கள்.
சிம்புவின் நடிப்பிற்கு ஈடு கொடுக்கும் வகையில், எஸ்.ஜே. சூர்யா தனது உடல் மொழியில் அசர வைத்திருக்கிறார்.

காட்சிக்கு காட்சி விதவிதமான முகபாவங்கள், வித்தியாசமான மாடுலேஷன் என தனக்குள் இருக்கும் நடிப்பின் மொத்த வித்தையையும் இந்த ஒரே படத்தில் எஸ்.ஜே.சூர்யா காட்டி விட்டாரோ என ஆச்சரியப்பட வைக்கிறது.

படத்திற்கு பக்கபலமாக இருந்த ஒரு கதாபாத்திரம் என்றால் எஸ்.ஜே.சூர்யா என்றுதான் சொல்லியாக வேண்டும்.ரிப்பீட் மோடில் அவர் பேசும் வசனங்கள் திரையரங்குக்கு வெளியேயும் தற்போது எதிரொலிக்கிறது.

படத்தின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் படம் முழுவதும் வருவது போன்ற காட்சியமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

முதல்வராக எஸ்.ஏ.சந்திரசேகர், முக்கியமான அமைச்சராக வை.ஜி.மகேந்திரன், இன்ஸ்பெக்டராக மனோஜ் பாரதி, சிம்புவின் நண்பர்களாக கருணாகரன், பிரேம்ஜி என தனித்தனியாக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிவியல் புனைவு, டைம் லூப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மேலும் வலு சேர்த்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்தியாசமான த்ரில்லர் கலந்த ஒரு திரைப்படத்தை பார்த்த சந்தோஷத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சாகுற நாள் தெரிஞ்சிட்டா வாழ்ற நாள் நரகமாகிவிடும் என்ற வசனத்துக்கு ஏற்றாற்போல, நடக்கப்போவது எல்லாம் முன்னரே தெரிந்துவிட்டால் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? அதுதான் இந்த டைம் லூப் திரைப்படமான மாநாடு.

தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றாற் போல வெங்கட்பிரபு இந்த படத்தை பிரபலமான நடிகர்களை வைத்து கொடுத்த விதம் பாராட்டப்பட வேண்டியது.

மாநாடு படம் குடும்பத்துடன் சென்று பார்க்கவேண்டிய ஒரு பொழுதுபோக்கு படமாகத்தான் இருக்கிறது.

பொதுவாக டைம் லூப் படங்களுக்கான திரைக்கதையை அமைக்கும்போது இருக்கும் மிகப்பெரிய சவால் படத்தில் என்ன பொய்க் கதை விட்டாலும், பார்ப்பவர்களை நம்பவைக்க வேண்டும்.

அந்த வகையில் டைம் லூப் என்ற சிக்கலான கதைக்களத்தை எடுத்து அதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

நாயகன் அப்துல் காலிக்காக சிம்பு, நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் ஃப்ரெஷ்ஷான நடிப்பில் சிம்புவைப் பார்க்க முடிந்தது ரசிகர்களுக்கு சந்தோஷமே.

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பலம் பொருந்திய வில்லன் பாத்திரம் என்றால் அது, எஸ்.ஜே.சூர்யா என்றே சொல்ல வேண்டும்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவுக்கு இது ஒரு உண்மையான கம்பேக் படம் என்றே சொல்லலாம்.