July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நான் சுத்த சைவனாக மாறிவிட்டேன்”; நடிகர் சிம்பு

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு.

மாநாடு திரைப்படம் நவம்பர் 25 ஆம் திகதி திரையிடப்பட உள்ளது.

இந்நிலையில் அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது .

அதேபோல் மாநாடு படத்தின் முன்னோட்ட ட்ரெய்லர் காட்சிகளும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிம்பு வெளிப்படையாக சில விடயங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

அதில் தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்கள் குறித்த ரசிகர்களின் கண்ணோட்டம், ரசனை என்பன மாறி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

வில்லன்களை அடிப்பதும், பன்ச் டயலொக் பேசுவதும் இனி ஹீரோயிசம் இல்லை என்ற அளவில் திரைத்துறை வளர்ந்து இருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்திருக்கிறார் .

முற்று முழுதாக சினிமா பார்வையாளர்களின் ரசனை மாறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை ஒரு அற்புதமான கமர்ஷியல் படம் என புகழ்ந்துள்ளார்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் எப்படி ஓடியிருக்கும் என்பதை தன்னால் கற்பனை செய்ய முடியவில்லை என தெரிவித்து இருக்கிறார்.

ஹீரோயிசத்தின் புதிய வடிவம் தான் சார்பட்டா பரம்பரை என கூறிய சிம்பு, இந்த படத்திலும் ஹீரோ தன் எதிராளியிடம் சவால் விடுகிறார். ஆனால், அது மிகைப்படுத்தப்படாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாக தெரிவித்திருக்கிறார் .

அதேபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தையும் சிம்பு புகழ்ந்திருக்கிறார்.

‘டாக்டர்’ போன்ற டார்க் காமெடி படங்களை மக்கள் ரசிக்கிறார்கள் எனக் கூறிய சிம்பு, அப்படத்தின் வெற்றி குறித்து தான் மகிழ்வதாக தெரிவித்திருக்கிறார் .

டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மிகவும் திறமையானவர் என பாராட்டியுள்ளார் சிம்பு, தான் முன்னதாக நடிக்க இருந்த வேட்டை மன்னன் படம் மூலம் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்பியதாகவும் ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது என சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

வேட்டை மன்னனும் வித்தியாசமான திரைக்கதையை கொண்ட படம் என தெரிவித்திருக்கிறார்‌.

தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு இங்கு பதில் அளித்துள்ள சிம்பு,

தான் ஒரு படத்துக்காக எடையை கூட்டியதாகவும் ,ஆனால், இரக்கமே இல்லாமல் மக்கள் தன்னை கேலி செய்தார்கள் என உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.தன்னை பாடி ஷேமிங் செய்தார்கள் என சிம்பு வருத்தப்பட்டுள்ளார் .

தனக்கும் நடிகை அனுஷ்காவுக்கும் நடந்தது ஒன்றுதான் எனக் கூறிய சிம்பு, தாங்கள் படத்துக்காக எடையை கூட்டினோம் என தெரிவித்திருக்கிறார்.

ஆனால் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மோசமாகப் பேசினார்கள் என செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்பு கூறியுள்ளார்.

தற்போது தான் ஆல்கஹாலைத் தொடுவதில்லை, சுத்த சைவமாக மாறிவிட்டேன் என சிம்பு தெரிவித்திருக்கிறார்.

உடல் எடையை குறைத்த சிம்பு தற்போது படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.உடல் எடையை குறைத்து வெற்றி என்ற முதல் படத்தில் அவர் நடித்திருந்தார்.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளிவரும் ஒரு ஆக்ஷன் படம் தான் மாநாடு.

டைம் லூப் அடிப்படையில் இந்தப் படத்தின் திரைக்கதை ஓட்டம் இருப்பதை நாம் ட்ரைலர் வாயிலாக அறிய முடிகிறது.

சிம்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது மாநாடு திரைப்படம்.

சிம்புவிற்கு தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கான திருப்பு முனையை இந்தப்படம் ஏற்படுத்துமா என
பொறுத்திருந்து பார்க்கலாம் .