இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (18) நடைபெற்றது.
சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கொட்டும் மழையிலும் சிம்பு ரசிகர்கள் சூழ இந்த வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்
இங்கு பேசிய நடிகர் சிலம்பரசன், தனது படங்களுக்கு மிகவும் பிரச்சனை கொடுப்பதாகவும், அதனால் மிகவும் கஷ்டப்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அத்தோடு எனது பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்கிறேன், என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என ரசிகர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.
அப்போது சில நிமிடம் அவர் மேடையில் பேச முடியாமல் நின்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
தன்னுடைய பிரச்சனைகள் எல்லாவற்றையும் தாக்குப் பிடித்து நிற்கும் ஒரு தயாரிப்பாளரால் மட்டும்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும் என்பது தெரிந்துவிட்டது.
அதனால் தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் இந்தப் படத்தை நீங்கள் எடுங்கள் என்று சொன்னேன், நான் நினைத்தது போலவே எத்தனையோ பிரச்சினைகளைத் தாண்டி இந்தப் படத்தை கொண்டுவந்து விட்டார் என சிம்பு தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய சிம்பு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனக்கு மிகவும் பிடித்தமானவர் எனவும் தான் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் தாங்கிக் கொள்வார் எனவும் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படவுள்ளதுடன், மாநாடு திரைப்படம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி திரையிடப்பட உள்ளது.
இதேவேளை, இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா சிம்பு ஒரு அற்புதமான குழந்தை என புகழாரம் சூட்டியுள்ளார்.
அத்தோடு இந்த மாநாடு படத்தின் மூலமாக இளையராஜா வீட்டுப் பிள்ளைகள், கங்கை அமரன் வீட்டுப் பிள்ளைகள், என் மகன், எஸ். ஏ. சந்திரசேகரன் என எல்லோரும் ஒன்று சேர்ந்தது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.