July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நகரோடி நாங்க நகரோடி… மூச்சு நின்னு போச்சு என் மண்ணே!…’- தெருக்குரல் அறிவின் கவனம் ஈர்க்கும் ஜெயில் பட பாடல்

நாடு விட்டு நாடு செல்வது, இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்வதென்பது இன்று நேற்றல்ல காலம் காலமாக
தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் தீர்வு காணப்படாத பிரச்சனைகளில் ஒன்று.

நகரோடி நாங்க நகரோடி …

வெகுதூரம் போன நகரோடி

நகந்தோமே ஒரு எடந்தேடி
தடம் தேடி…

என உணர்வைத் தட்டி எழுப்பும் வரிகளுடன் வெளியாகியுள்ளது ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படப்பாடல்.

இந்த பாடலில் ராப் இசைக் கலைஞர் தெருக்குரல் அறிவின் கம்பீரமான குரலில், குரலற்றவர்களின் குரலாய் வெளியாகியுள்ள வரிகள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நகரமயமாக்கல் என்ற பெயரில், அதிகாரம் படைத்தவர்களால் சென்னைக்கே உரித்தான பூர்வகுடிகளை வெளி ஊர்களுக்கு இடம்பெயர வைத்ததை அழுத்தமாக பதிவு செய்கிறது இந்த நகரோடி பாடல்.

கூர மேல காகம் சேர
தூறும் எங்க சேரி வானம்…

ஊர விட்டு ஓரம் போக
கூறும் இந்த நாடு நாளும்…

மூச்சு நின்னு போச்சு என் மண்ணே…

என பெட்டி ,படுக்கைகளுடன் சொந்த மண்ணை விட்டு இடம்பெயர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்படும் மக்களின் வலியை அனைவரும் உணரும் வகையில் எடுத்து சொல்லியுள்ளது ஜெயில் பட பாடல்.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் ‘உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயில்.

இரண்டு வருடங்களாக வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் இப்படத்தின் உரிமையை சமீபத்தில்தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார்.ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பூர்வகுடிகளின் நியாயங்களை தட்டிக் கேட்கும் நகரோடி பாடல் சோனி மியூசிக்கில் வெளியிடப்பட்டிருக்கிறது.

சென்னையில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட பூர்வகுடிகளின் வலியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ஜெயில் படத்தில் இடம்பெறும் நகரோடி பாடல்.

ஆகவே ஜெயில் படமும் இந்த சென்னையின் பூர்வகுடி மக்களை பற்றிய திரைப்படமாக இருக்கலாம் என நாம் யூகிக்க முடிகிறது.

நகரோடி நாங்க நகர்ரோடி
நதியோரக் கர நகரோடி

எழுந்தோமே எங்க கட வீதி
எது மீதி?

என வரிக்குவரி மனதை தட்டி எழுப்பும் வகையில் உணர்வுகளை பதிவு செய்திருக்கிறது இந்த பாடல்

ஜி.வி பிரகாஷ் ,அனன்யா பாட், தெருக்குரல் அறிவு மூவரும் போட்டி போட்டு பாடல் பாடி இருப்பது இந்த பாடலின் காட்சிகளின் மூலம் அறிய முடிகிறது .

பாடகி அனன்யா பாட் குரல் இந்த வலி மிகுந்த ,உணர்வுமிக்க பாடலுக்கு இன்னும் வலு சேர்த்திருப்பது, அவரது குரல் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என்பது நிச்சயம்.

தெருக்குரல்’ அறிவின் ராப் இசை குரலும் நம் இதயத்தின் கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது.

நிலத்தை இழந்து புலம்பெயர்ந்த சனம்…

தலைமுறைக்கும் இருக்கும் வலி கொடுத்த ரணம்…

கல்லுக் கரட்டை உடைத்து நகர் அமைத்த இனம்…

சதி விரட்ட விரட்ட உயிர் தவிக்க தினம்…

பள்ளிக்கூடம் போக அன்னாடம் மூச்சு வாங்குதே…

ஊர் போய் சேர என்னோட மூச்சு ஏங்குதே…

கண்ட துண்டமாக என் வேரை கூறு போடுதே..

வந்தவர்கள் வாழ நம்மை வந்தேறி ஆகுதே…

கழுத்தை நெரித்தால் பலத்தை திரட்டு…

உடமை பறித்தால் உரிமை முழக்கு

இருட்டில் அடைத்தால் வெளிச்சம் கிளப்பு…

இருக்கும் இடம் தான் நமக்கு உயிர் மூச்சு…

என்ற வரிகள் …புலம்பெயர்ந்த வலி என்பது தலைமுறைக்கும் இருக்கும் என தெருக்குரல் அறிவின் குரலில் ஒலிப்பது இன்னும் வலு சேர்த்திருக்கிறது .

சென்னையில் காலங்காலமாக கூவம் நதிக்கரையை ஒட்டிய பகுதிகளில் சென்னைக்கே உரித்தான தமிழ் மொழி பேசுபவர்கள் வாழ்ந்து வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன ‌‌.

அந்தவகையில் காலப்போக்கில் நாகரீகம் மாற்றமடைந்து வரும் நிலையில், அந்த மக்கள் ஒடுக்கப்பட்டு ,தள்ளி வைக்கப்பட்டு நவீனத்துவம் உள்ளே நுழைந்தது.

அந்த மக்கள் காலம் காலமாக அனுபவித்து வரும் இன்னல்களையும் அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளையும் வலிமிகுந்த இந்த பாடல் எடுத்துரைக்கிறது.

செத்தாலுமே மண்ணை விட்டுத் தராத நீ…

இழக்கத்தான் உனக்குத்தான் எதுவுமே இல்ல இல்ல இனி…

ஓ ஊர விட்டு வேர விட்டு தூரம் போகிறோம்…

வேறு யாரோ ஆகிறோம் பூமியே…

நாதியத்து நியாயம் கேட்டு காயம் தாங்குறோம்…

காலம்பூரா ஏங்குறோம் சாமியே…

என ஒரு ஏக்கத்துடன் ,தெருக்குரல் அறிவின் கைவண்ணத்தில் உருவான இந்தப் பாடல் தமிழ் மக்களின் மனங்களில் உள்ளூர புதைந்து போய் இருக்கும் உணர்வுகளை தட்டி எழுப்பும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இன்றும் தமக்கான நியாயம் கிடைக்காமல் ,அடிப்படை வசதிகள் கூட இன்றி தமக்கான அடையாளத்தை இழந்து நாதியற்று நிற்கும் பூர்வீகக் குடிகளுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.