July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்ன சொல்கிறது ஜெய் பீம்?

ஜெய் பீம் என்ற அம்பேத்காரின்  வசனத்தை தலைப்பாக வைத்து ஞானவேல் இயக்கி இருக்கும் படம் தான் ஜெய் பீம்.
ஜோதிகா, சூர்யா தயாரித்திருக்கும் இந்தப் படம் கடலூரில் நடந்த உண்மை சம்பவத்தை  அடிப்படையாக கொண்டது.
இப்படம் பல கேள்விகளை மக்கள் மனங்களில் எழச் செய்கிறது.
மனித நேயம் மறந்த அதிகாரிகளால், ஏனென்று கேட்க ஆளில்லாத பட்டியலின, பணமில்லாத மற்றும் அதிகாரமற்ற மக்கள் எவ்வாறு துன்பப்பட்டார்கள் என்ற உண்மை சம்பவத்தை படம் பிடித்து காட்டியிருக்கிறது ஜெய் பீம்.
ஆதி இனமான தமிழ்க் குடியின் மூத்த இனம் குறவர், இருளர், பள்ளர், பறையர் என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் சில ஜாதியினருக்கு இந்திய குடிகள் என்ற உரிமை இன்னும் கிடைக்கவில்லை என்பது துயரமான செய்தி.
விவசாயக் கூலிகள், பிணம் அடக்கம் செய்பவர்கள், தற்போது நடைமுறையில் இல்லாத மலம் அள்ளுபவர்கள், பாம்பு பிடிப்பவர்கள் என தொழில் முறையில் கடைக்கோடியில் இருக்கும் இவர்களுக்கு எந்தவித  பாதுகாப்பும் இன்றளவும் இல்லாமல் இருக்கிறது என்பதே உண்மை.
இந்த உண்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட ஒரு களமாக அமைந்த திரைப்படம் தான் ஜெய் பீம் .
ஆதி தமிழ் நிலத்தில் வேட்டையாடிகளாக இருந்து, விவசாயத்தை கற்று, நகரங்களை அமைத்து, நாடு ஆளும் மன்னர் என ஒரு இனம் முன்னேறி செல்கையிலே, அந்த இனத்தின் ஆதி பிள்ளைகள் என அறியப்பட்ட இவர்கள் சமூக மாற்றத்திற்கு ஈடு கொடுத்து, நகருக்குள் வராமல், வாழ்விடங்களான மலைகளிலும், ஊரின் ஒதுக்குப் புறங்களில் தங்கி இருந்து, தன்னுடைய வாழ்வுரிமையை விட்டுக் கொடுத்து விட்டார்கள் என்பது கண்கூடான உண்மை.
இதை சாதாரண மக்கள் உணர்ந்தார்களோ இல்லையோ, தமிழ் கடவுளான முருகன் இதை உணர்ந்துதான், தேவர் இனம் என சொல்லப்படும் உயர்ந்த நாகரீகத்தை சேர்ந்த நகரில் வாழ்ந்த தேவயானையை மணந்த அதேவேளையில், ஒடுக்கப்பட்ட இனம் என்று சொல்லப்பட்ட மலைமேல் வாழ்ந்த குறவர் இனத்தைச் சேர்ந்த வள்ளியை மணம் முடித்திருந்தார்.
இப்படி மனித நேயத்தையும் சமத்துவத்தையும் சரி சமமாக பாவித்த, கடவுளை கும்பிடும் உயர்ந்த இனம் என சொல்லிக் கொள்ளும் நம் மக்கள்தான், அதிகாரம் கிடைத்தவுடன் மனித நேயத்தை மறந்து அரக்கர்களாக செயல்படுகிறார்கள்.
இந்த படத்தின் கதை என்று பார்த்தோமேயானால்,
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்னர் குற்றப்பரம்பரை என்று ஒரு இனத்தையே ஆங்கிலேயர்கள் முத்திரை குத்தி வைத்திருந்தார்கள்.
இதைப்போன்றே சுதந்திர இந்தியாவில் ஏனென்று கேட்க நாதியில்லாத, பழங்குடியின மக்களை, தங்கள் வேலை விரைவாக முடிய வேண்டும் என்று சில காவல் துறையைச் சார்ந்தவர்கள் பொய் வழக்குகளில் கைது செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.
அப்படிப்பட்ட ஒரு திருட்டு வழக்கில் குற்றம் சுமத்தப்படும் ராசாக்கண்ணு பொலீஸ் விசாரணையில் இறந்து போக, அந்தக் கொலையை அழகாக மறைத்து, அவர் உடலை வேறு மாநிலத்தில் எல்லையில் போட்டுவிட்டு, ராசாக்கண்ணு தப்பிவிட்டதாக செட்டிங் செய்கிறார்கள்.
ராசாவை தேடி அவர் மனைவி பார்வதி மற்றும் அறிவொளி இயக்கத்தைச் சார்ந்த  ஒரு பெண் ஆசிரியை  மற்றும் உள்ளூர், வெளியூர் கம்யூனிஸ்ட் தோழர்கள்  என அனைவரும் இணைந்து  சென்னையில் இருக்கும் வழக்கறிஞர் சந்துருவின் மூலமாக  மேற்கண்ட சம்பவத்தை  விசாரணையில் அவர் வெளிப்படுத்தும் விதமாக இந்தப் படம் அமைக்கப்பட்டிருக்கிறது.
பொய் கேசில் சிறைக்கு செல்லும் ராசாக் கண்ணுவிற்கு என்ன நடக்கிறது?, விழுப்புரம் மாவட்ட மலைக் கிராமத்தில் வசிக்கும் பார்வதி எனும் பழங்குடியின பெண்ணுக்காக நடத்திய சட்டப் போராட்டம் தான் திரைக்கதையின் மையக் கரு.
ஜாதி தீண்டாமை , பொலீஸ் டார்ச்சர் , உரிமை போராட்டம். இதுதான் படத்தின் உள்ளோட்டமாக இருக்கிறது.
பழங்குடி மக்களென கூறப்படும் இவர்கள் எதிர்கொள்ளும் அதிகார அழுத்தம், இன்னல்கள், சட்ட போராட்டம், உரிமைக்கான குரல் என பல விஷயங்களை கண் முன் நிறுத்தியுள்ளது ஜெய் பீம் .
இந்த படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்து இருப்பதினால் சில பெயர்களை மாற்றியும் சில இனத்தின் பெயரை மாற்றியும் காண்பித்திருக்கிறார்கள்.
 ஆனாலும் இந்தப்படம் உரக்கச் சொல்லும் ஒரு விஷயம் என்னவென்றால், நாம் அனைவரும் மனிதர்கள், அதிகாரிகளும்  ஆளும் வர்க்கத்தினரும் அவர்கள் வேலை தரும் அழுத்தத்தாலும் பதவி மற்றும் அதிகாரத்தில் கிடைக்கும் லஞ்சத்தை கருத்தில் கொண்டும், தன் அதிகாரத்திற்கு கீழ் வரும் மக்களை அடித்து நசுக்காமல் மனித நேயத்துடன்  நடத்த வேண்டும் என்பதே.
தமிழகத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து படம் எடுக்கப்பட்ட நோக்கம் எதுவாக இருந்தாலும், மனித மனங்களில் அன்பும், மனித நேயமும், மனிதன் ஒரு மனிதனை சக மனிதனாக பார்க்கும் நிலை ஏற்பட்டால் தான் சமத்துவம் என்றொரு நிலை உருவாகும்.
ராசாக் கண்ணுவிற்கு நீதி பெற்றுத் தந்த முன்னாள் நீதிபதி மற்றும் வழக்கறிஞர் சந்துருவின் நிஜ வாழ்க்கை போராட்டத்தை இந்த படம் கதையாக சொல்கிறது.
இது தொண்ணூறுகளில் கடலூரில் நடந்த உண்மைச் சம்பவமாக இருந்தாலும், இன்றும் ஆங்காங்கே சக மனிதர்கள் மீது  கட்டவிழ்த்து விடப்படும் துயரச் சம்பவங்களும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
ஒரு நீதிபதியின் விடாப்பிடியான உறுதியினால் உண்மை சம்பவம்  அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. ராசா கண்ணுக்கு என்ன நடந்தது, எவ்வாறு அவர் கொலை செய்யப்பட்டார் என கண்டுபிடிக்கப்பட்டது .
ஆனால் அதே போன்று தற்போதைய காலகட்டத்திலும் கூட பல ராசா கண்ணுகள்  கண்ணுக்கு தெரியாமலேயே மறைந்து போய் இருக்கிறார்கள்.
நடந்த உண்மையை முன்வைத்திருக்கிறது திரைப்படம். அதிகார வர்க்கத்தினர் மாற்றிக்கொள்ள வேண்டியது எதனை? இதுதான் இந்தப் படத்தின் படிப்பினையாக இருக்கலாம்.
இந்த படத்தை பற்றி விமர்சனம் முன்வைப்பதை விட ஒருமுறை படத்தை பார்த்து விடுவது ஆகச் சிறந்தது.
என்னதான் பழங்குடி மக்கள் மூத்த குடிகளாக இருந்தாலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் , அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலமையிலேயே இருக்கிறது.
இன்னும் தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவம், விஷ முறிவு போன்றவை இன்னும் இந்த பழங்குடி மக்கள் இடத்திலேயே இருக்கிறது, இவர்களை பாதுகாத்து அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டியது அதிகாரம் படைத்தவர்களின் கடமையாக இருக்கிறது.
ஜெய் பீம் என்ற திரைப்படம் நடந்த உண்மை சம்பவத்தை  படம் பிடித்துக் காட்டி இருந்தாலும், இன்னும் நிறைய பக்கங்கள் இந்த மக்களின் வாழ்வியலில் இருந்து படம்பிடித்து காட்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.  இதை உணர்ந்து மக்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரது நோக்கமாக இருக்கிறது.
உண்மை சம்பவத்தை பொது மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் மெருகூட்டி ,பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண மனிதனுக்கு நடந்த ஒரு கொடூர உண்மைச் சம்பவத்தை  திரைக்கு கொண்டுவந்த  இயக்குநர் த.செ.ஞானவேல் தரமான ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார்.
அதைப்போல் இந்த திரைப்படத்தில் கதாபாத்திரங்களாகவே மாறிய ராசாக் கண்ணுவாக மணிகண்டன், செங்கேணியாக லிஜோமோள் ஜோஸ் இருவரும் வட்டார வழக்கை பேசும் விதம்,  பார்வையாளர்களை அந்த மலைக் கிராமத்துக்கே  அழைத்துச் செல்கிறது.
ஜெய் பீம் திரைப்படம் மக்களுக்கு சொல்ல வந்ததை உணர்த்தியதா? தமிழகத்தின் பூர்வ குடிகளுக்கான உரிமைகள் இன்னும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.