July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பன்முக ஆளுமை கொண்ட கலைஞன்

உலகநாயகன் கமல்ஹாசன் என்று அறியப்பட்ட செவாலியர் கமல் ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக, திரைகளில் மட்டுமே பயணித்துக் கொண்டிருந்த அவருடைய திறமை, தொகுப்பாளராக ஒவ்வொரு இல்லங்களுக்கு சென்று சேர்ந்தது.

அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஏற்படுத்தி தேர்தலில் நிற்கும் அளவிற்கு ஒரு புதிய உச்சத்தை தொட்டார்.

இப்படி பயணித்த விக்ரம் கமல் ஹாசனின் திரைப்பயணம் நேற்று தொடங்கி இன்று கிடைத்த புகழ் அல்ல.

களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.நடன கலைஞராக, நடன இயக்குனராக, சினிமாவில் தன் பயணத்தை தொடர்ந்தார்.

இருப்பினும் நடிகராக வேண்டுமென்ற இவரின் முயற்சியின் காரணமாக கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் என்ற படத்தில் தியாகு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

1973 இல் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறியப்பட்டார்.

மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி என்று தொடர்ந்து நடித்தாலும், தமிழில் அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே ஆகிய படங்கள் இவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக உயர்த்தியது.

பின்னர் இளமை ஊஞ்சலாடுகிறது, தப்புத்தாளங்கள், அவள் அப்படித்தான், சிகப்பு ரோஜாக்கள், நினைத்தாலே இனிக்கும், பசி, வறுமையின் நிறம் சிகப்பு ஆகிய படங்கள் இவரை வேறுபட்ட நடிகராக காட்டியது.

ஏக் துஜே கேலியே என்ற இந்தி படத்திலும் அந்த கால கட்டத்தில் நடித்து புகழின் உச்சத்தை தொட்டார் .

டிக் டிக் டிக், வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, சகலகலா வல்லவன் என்று இவர் திரைப் பயணம் நீண்டு கொண்டே சென்றது.சட்டம், சலங்கை ஒலி, தூங்காதே தம்பி தூங்காதே, ஒரு கைதியின் டைரி, மங்கம்மா சபதம், காக்கிச்சட்டை, ஜப்பானில் கல்யாணராமன், புன்னகை மன்னன், சிப்பிக்குள் முத்து என்று இன்னும் இவர் திரைப் பயணம் தமிழ் சினிமாவின் பக்கங்களை புரட்டிப் போட்டது .

வசனங்களே இல்லாத பேசும் படம் இவரின் தனித்தன்மையை உயர்த்தியது.அதிலிருந்து மணிரத்னத்தின் நாயகன் படம் அவரை கதாபாத்திரங்களை கையாளும் வித்தியாசமான நடிகனாக வெளிப்படுத்தியது.

அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், குணா, மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, குருதிப்புனல், அவ்வை சண்முகி, ஆளவந்தான், இந்தியன் என நடிப்பிற்காக தன்னுடைய உருவத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் பண்பட்ட, ஹாலிவுட் நடிகர்களே பார்த்து வியக்கும் அளவிற்கு உருமாறி நின்றார்.

இதற்கு சிறந்த உதாரணம் தான் அவரின் தசாவதாரம் திரைப்படம்.

இவரின் இத்தகைய திரை பயணத்திற்கு பல மாநில அரசுகளின் விருதுகள், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள், பிலிம்ஃபேர் விருதுகள் என இவர் பெற்ற விருதுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் இந்திய அரசும் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வழங்கியது.

சிவாஜி கணேசனுக்கு பிறகு பிரான்ஸ் அரசின் செவாலியர் விருதை பெற்றவர் கமல்ஹாசன் மட்டுமே.

இவரின் திரைப் பயணத்தை இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன், சமீபத்தில் பாபநாசம் வரையிலும் இன்னுமும் இவர் திரைப்பயணம் இந்தியன் 2 , விக்ரம் வரையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற முத்தாய்ப்பான படங்களுக்கு திரைக்கதை அமைத்து இயக்கவும் செய்திருந்தார்.

தற்போது விக்ரம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் உலக நாயகன் கமல் ஹாசன். இந்த திரைப்படத்திலும் நடிப்பின் உச்சத்தை அவர் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸில் இவரின் பேச்சை கேட்பதற்காகவே மிக நீண்ட கூட்டம் தொலைக்காட்சியின் முன் காத்து இருந்தது என்றால் மிகையில்லை.

இத்தகைய தன்னுடைய கடும் உழைப்பாலும், ஆர்வத்தினாலும், எந்நேரமும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்ததாலும், நடிகராக, நடன ஆசிரியராக, திரைப்பட இயக்குனராக, திரைப்பட தயாரிப்பாளராக, பின்னணிப் பாடகராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக, பாடகர் என பன்முகம் கொண்டவர்.

இன்று (07) 67வது பிறந்தநாளை கொண்டாடும் உலகநாயகன் கமல் ஹாசனை திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் ,ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

உலக நாயகன் கமல் ஹாசனின் திரைப் பயணம் தொடர நாமும் வாழ்த்துவோம்.