தாதா சாகேப் பால்கே விருதினை எதிர்பார்க்கவே இல்லை என்று நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் இது சாத்தியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது.இதற்கு பல்வேறு திரையுலகினரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், தனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
ஒன்று, மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதினை மத்திய அரசு தனக்கு வழங்கவுள்ளதாக கூறியுள்ளார்.
இரண்டாவது, தன்னுடைய மகள் செளந்தர்யா விசாகன்,சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய ‘HOOTE’என்கிற APP-ஐ உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார் என தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விருது வழங்கும் விழா நடத்தப்படாமல் இருந்த நிலையில் இவ்வருடம் நடைபெறுகிறது.
இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது,லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகிய இருவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள்.
டெல்லியில் நாளை (25) நடைபெறும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.
தாதா சாகேப் பால்கே விருது தனக்குக் கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் கே.பாலசந்தர் சார் இல்லையே என்று வருத்தமாக உள்ளது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறும் விழாவில் 2019-ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
இதில் ’அசுரன்’ படத்துக்காக சிறந்த நடிகராக தனுஷ், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருது வழங்கப்படவுள்ளது.
பார்த்திபன் இயக்கத்தில் உருவான ’ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது, ‘கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது வழங்கப்படுகிறது.
அதேபோல் இசையமைப்பாளர் டி.இமானுக்கு ‘விஸ்வாசம்’ படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளர் விருது ஆகியவையும் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.