ஒஸ்கார் விருது போட்டிக்கு செல்ல இந்தியா சார்பாக தமிழ் படமான ‘கூழாங்கல்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த கூழாங்கல் திரைப்படம் சிறந்த இந்திய திரைப்படமாக ஒஸ்கர் விருது போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
இப்படம் ரோட்டர்டாம் 50 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள படம் தான் கூழாங்கல்.
இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர்.
பல்வேறு பிரபலமான சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘கூழாங்கல்’ திரையிடப்பட்டு விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் இப்போது இந்தியா சார்பில் ஒஸ்கார் விருதுப் போட்டிக்கு ‘கூழாங்கல்’ படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெரும் கௌரவமாக கருதப்படுகிறது.
இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்திய அரசாங்கம் சார்பில் படக்குழுவினருக்கு இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் சிறந்த சர்வதேச திரைப்படம் என்கிற பிரிவில் ஒஸ்கார் போட்டிக்கு இந்தியா சார்பில் ஒரு படம் பரிந்துரைக்கப்படும்.
அதற்கு இந்தியாவில் வெளியான படங்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.
இதில் வித்யா பாலன் நடித்த ‘ஷெர்னி’, விக்கி கவுஷல் நடித்த ‘சர்தார் உதம்’, மலையாளத்தில் ‘நாயாட்டு’, தமிழிலிருந்து ‘மண்டேலா’, ‘கூழாங்கல்’ ஆகிய படங்கள் போட்டியிட்டன.
இந்தப் படங்களை இயக்குநர் ஷாஜி என்.கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு பார்வையிட்டது.
அதிலிருந்து ‘கூழாங்கல்’ படம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு ஒஸ்கார் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி ஒஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.