July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது”- சூர்யாவின் ஜெய் பீம் ட்ரெய்லர்

தப்பு பண்றவங்களுக்கு பதவி,பணம், சாதினு நிறைய இருக்கு .ஆனா பாதிக்கப்பட்டவங்களுக்கு?‌‍ நாமதானே இருக்கோம் என சூர்யா வழக்கறிஞராக வாதாடும் பல அழுத்தமான வசனங்களுடன் வெளியாகியிருக்கிறது ஜெய் பீம் ட்ரெய்லர்.

பழங்குடியின மக்களுக்காக,அடித்தட்டு மக்களுக்காக வாதாடும் ஒரு வழக்கறிஞராக இப்படத்தில் வருகிறார் நடிகர் சூர்யா.

ஜெய் பீம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களில் 20 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த படம் சிலரின் தவறுகளையும், அஜாக்கிரதை, சர்வாதிகாரத்தின் போக்கையும் அதனால் பாதிக்கப்படும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் சுட்டிக்காட்டும் ஒரு படமாக இருக்கும்.

பண வசதி, சாதிய ரீதியான பாகுபாடு, உயர் பதவியில் இருப்பவர்களுக்கு என ஒரு மாதிரியான அணுகுமுறை, அடித்தட்டு மக்களிடம் காட்டும் வேற்றுமையான நடைமுறைகள் என சமூகத்தில் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது ஜெய் பீம்

மக்களுக்காக போராடும் ஒரு வழக்கறிஞரின் வாதம் ,ட்ரைலரில் வரும் வசனங்களும் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

ட்ரெய்லரில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்காக போராடும் வழக்கறிஞர் சந்துருவாக கவனம் ஈர்க்கிறார் சூர்யா.

சட்டம் சக்தி வாய்ந்த ஆயுதம்.யாரைக் காப்பாற்ற நாம பயன்படுத்துறோம் என்பதுதான் முக்கியம்… என்று சூர்யா பேசுவது நீதியின் குரலாய் ஒலிக்கிறது.

ட்ரெய்லரின் இறுதியாக வரும், நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்டுகிறார் வழக்கறிஞர் சூர்யா.

தமிழகத்தில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

‘சுதந்திரம் கிடைச்சு 50 வருஷம் ஆகுது, ஆனா, இவங்கக் கைல ஒரு அட்ரெஸ் ஃபுருப் கூட இல்ல…என்ற வசனம் பழங்குடியினரை கேட்க பார்க்க யாரும் இல்லை, இவர்களின் வாழ்க்கை எவ்வாறு செல்கிறது என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது இந்த ட்ரெய்லர்.

ஒரு ஆளுக்கு ஒரு கேஸ்தான் போடணும்னு சட்டம் இருக்கா என்ன? தலைக்கு ரெண்டு கேஸ் போட்டு விடுங்க’…. ‘திருட்டுப் பசங்கள பழங்குடிகள்னு பாலிடிக்ஸ் பண்ணாதீங்க’ போன்ற வசனங்கள் ஆளும் அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறையை புடம் போட்டுக் காட்டியிருக்கிறது

‘அந்த நாலு குடிசையையும் கொளுத்தி விடுறதுக்கு எம்மா நேரம் ஆகிடும்?’ என நடிகர் இளவரசு பேசும் வசனம் சாதிய மனோநிலையை ஊடறுத்துச் செல்கிறது.

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘கூட்டத்தின் ஒருத்தன்’ இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள படம்தான் ஜெய் பீம். இந்தப் படத்தை நடிகர் சூர்யா தயாரித்து நடிக்கிறார் .

அடித்தட்டு மக்கள் எவ்வாறு தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறார்கள், அவர்களுக்கான நீதியின் குரல் எவ்வாறு நசுக்கப்படுகிறது, அந்த மக்களுக்கு ஆதரவாக போராடும் ஒரு வழக்கறிஞராக சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘கர்ணன்’ பட நாயகி ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தமிழகத்தின் முன்னாள் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு இருளர் இன மக்களுக்காக வாதாடிய வழக்கினையே ‘ஜெய் பீம்’ படமாக உருவாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெய் பீம் படத்தின் டீசரை தொடர்ந்து, டிரைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 2 ஆம் திகதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஜெய் பீம் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.