July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குடும்பங்கள் கொண்டாடும் ‘டாக்டர்’ திரைப்படம்

மிக நீண்ட இடைவெளியின் பின்னர் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வண்ணம் வெளியாகியிருக்கிறது சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படம்.

சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் திகதி வெளியான ‘டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப்படம் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், இயக்குநர்கள் என அனைத்து தரப்பினராலும் நேர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது.

கொரோனா சூழ்நிலையில் இருந்து வெளி வருவதற்கு முற்றுமுழுதாக நகைச்சுவை நிறைந்த இந்த டாக்டர் திரைப்படம் ஒரு அருமருந்தாக இருப்பதாகவே சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை பார்க்க முடிகிறது.

படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கலாம் என யூகிக்கப்பட்ட நிலையில் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் அதனை உடைத்து நகைச்சுவை வடிவமாக கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

ஆகவே தற்போது நெல்சன் திலீப்குமார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது என்றே கூற வேண்டும். ஏனென்றால் தற்போது தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடித்து இறுதியாக வெளியான சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும் அவற்றைத் தகர்த்து இந்த டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ,ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில், ஆரம்ப காலகட்டங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,மான் கராத்தே போன்ற திரைப்படங்கள் நகைச்சுவை கலந்த என்டடெய்னர் படங்களாகவே இருந்தன. அந்த வரிசையில் இந்த டாக்டர் படமும் இடம் பிடித்திருக்கிறது.

பெண்கள், குழந்தைகள் கடத்தல் எனும் சீரியஸான பிரச்சினையை கையில் எடுத்துள்ளார் இயக்குநர். நகைச்சுவை, சென்டிமென்ட் கலவையில் உருவான காட்சிகளை திரைக்கதை நெடுகிலும் அடுக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு, தீபா உள்ளிட்ட பலரும் காமெடியான நடிப்பில் கவனம் ஈர்த்து பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டாக்டர்’ படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்தேன், என்ன ஒரு ஜாலியான பயணம்.

சிவகார்த்திகேயன் சார் செம்ம, குடும்பத்தோடு பார்க்க வேண்டிய பொழுது போக்குப் படம் என படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.

‘டாக்டர் பார்த்தேன். சிவகார்த்திகேயனுக்கும் நெல்சன் திலீப் குமாருக்கும் வாழ்த்துகள், இந்த அற்புதமான அனுபவத்தை கொடுத்த மொத்தப் படக் குழுவிற்கும் பாராட்டுகள் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

டாக்டர் படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடையும் என திரைத்துறையினர் கூறுகின்றனர்.