July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சந்திரஹாசனின் ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க” நேரடியாக ஓடிடியில் வெளியீடு

நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும் மறைந்த நடிகருமான சந்திரஹாசன் கடைசியாக நடித்த ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இது தொடர்பில் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், ”தன் திறமையைத் திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கைக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் தான் சந்திரஹாசன்.

நடிகர் கமல்ஹாசனுக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரண்டு அண்ணன்கள்.

அதில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்த நடிகர் சந்திரஹாசன், 2017 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

அதன்பிறகு கமல்ஹாசனே தயாரிப்புப் பணிகளைக் கவனித்து வருகிறார்.

தனக்கு அண்ணன் சந்திரஹாசன் எவ்வளவு பெரிய பலம் என்று பல்வேறு மேடைகளில் கமல்ஹாசன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர், உயிரிழப்பதற்கு முன்பு ‘அப்பதாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்தப் படம்தான் ஒக்டோபர் 8 ஆம் திகதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், ”என் திறமையை வெளிப்படுத்தும் பேரார்வத்தில் தன்திறமையை திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன். அவர் நடித்த கடைசிபடம்‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’அக்டோபர் 8ம் திகதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.என்னை வாழ்த்தியவரை வணங்க கடமைப்பட்டுள்ளேன் ‘ஐயா..அப்பா..உங்கள் படம் 8ம் திகதி ரிலீஸ்” என்றுக்கூறி படத்தின் டிரெய்லரை வெளியிட்டிருக்கிறார்.