இந்திய சினிமா வரலாற்றில் மறக்க முடியாத பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.
தற்போதை தமிழ் சினிமாவின் கதாநாயகர்களின் முன்னுதாரணமாக, ரோல் மாடலாக நடிப்புக்கே தனிப்பெரும் உதாரணமாகத் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்.
இவர், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும், கட்டுக்கோப்புக்கும், வழிகாட்டியாகவும் உதாரண புருஷராக திகழ்ந்தவர்.
படப்பிடிப்பின் போது இவரது நேரம் தவறாமை, தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கான அயராத முயற்சி ,தனது நடிப்பிற்கான கடும் உழைப்பு, அதுமட்டுமல்லாமல் தமிழ்சினிமாவில் ஞாயிற்றுக்கிழமை கட்டாய ஓய்வு அனைவருக்கும் தேவை என்பதை வலியுறுத்தி பெற்றுக் கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவர் சிவாஜி கணேசன்.
இந்திய சினிமா வரலாற்றில் கலைத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் சிவாஜிகணேசனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாதா சாகேப் பால்கே தொடங்கி சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார் இவர்,
அவ்வப்போது தனது உரைகளில் குறிப்பிடுவதுதான் ‘சும்மா கிடைத்துவிடவில்லை புகழும், பெயரும்’ என்ற வசனம்.
அந்த அளவிறகு தனது கதாபாத்திரத்திற்காக இரவு பகல் என்று பாராமல் கடும் முயற்சி செய்து அதனை திறம்பட நடித்துக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
பராசக்தி தொடங்கி ,வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. திருவிளையாடல், பைலட் பிரேம்நாத், தில்லானா மோகனாம்பாள் என திரைப்படங்களில் வரிசை நீண்டுகொண்டே செல்லும் . சுமார் 300 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்து நவீன கலைத்துறைக்கு ம் புத்துயிர் ஊட்டியவர்.
அடுத்த தலைமுறை நடிகர்களுடன் தேவர் மகன் ,ஒன்ஸ்மோர், படையப்பா, பூப்பறிக்க வருகிறோம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து இன்றுவரை மக்கள் மத்தியில் நீங்காத கதாநாயகனாக திகழ்கிறார்.
நாம் நேரில் பார்த்திராதவர்களை தனது மிகச்சிறந்த நடிப்பினால் கண் முன்னே கொண்டு வந்தவர் தான் சிவாஜி கணேசன்.
காலத்தால் அழியாத கதாநாயகர், தமிழ் சினிமாவில் ‘காட்பாதர்’ என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுபவர் ,மிகச்சிறந்த கலைஞன் இன்றும் பல நடிகர்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இன்று நடிகர் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்த நாளையொட்டி கூகுள், தனது முகப்பு டூடுலில் சிவாஜி கணேசனின் படத்தை வைத்து உலகறிய செய்து கௌரவித்திருக்கிறது.
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி கூகுள் நிறுவனம் கௌரவித்துள்ள அந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.