July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தெலுங்கு படத்தில் நடிக்கும் உலகப் புகழ் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன்

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விஜய் தேவர கொண்டா. விஜய் தேவர கொண்டாவின் புதிய படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜய் தேவர கொண்டாவின் ‘லைகர்’ என்ற படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். குத்துச் சண்டையை மையக் கருவாக வைத்து இந்த லைகர் படம் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. கடந்த ஆண்டு வெளியான ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்திற்கு பிறகு விஜய் தேவர கொண்டா பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் படங்களில் மிகப் பெரும் வெற்றியையும் வசூலையும் குவித்து வருவது தான் விஜய் தேவர கொண்டா.

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை தற்போது படங்கள் பெரிய பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டு வருகின்றன. அதுவும் பிரம்மாண்டமாக அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தமிழ் சினிமாவை மிஞ்சும் வகையில் படங்கள் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பாகுபலி, ருத்ரமாதேவி ,ராதேஷ்யாம், வேர்ள்ட் ஃபேமஸ் லவ்வர், ஆர்.ஆர்.ஆர்.கீதா கோவிந்தம், தேவதாஸ் என தெலுங்கு சினிமாவில் இவ்வாறு ஏகப்பட்ட பல வெற்றிப்படங்கள் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளிவரவும் தயாராக இருக்கின்றன.

அந்த வரிசையில் உலகப் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் முதல் முறையாக இந்திய சினிமாவில் அதுவும் தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படத்தை, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன் நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’ எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், மைக் டைசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது, லைகர் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. விஜய் தேவர கொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .

அதேபோல், இன்றும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் .

ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.

மைக் டைசனுக்கு, குத்துச் சண்டை ரசிகர்கள் உலக அளவில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்திய சினிமாவில் முதல் முறையாக கால்பதிக்கும் அவரின் திரைப்படத்தை பார்ப்பதற்கு தற்போதே எல்லோரும் ஆவலோடு காத்திருக்கின்றனர் .

விஜய் தேவர கொண்டா ,மைக் டைசன் இணையும் லைகர் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.