January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தலைவி’ ஒரு கற்பனை கலந்த கதை

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தலைவி.

கடந்த 10ஆம் திகதி முதல் தலைவி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தலைவி திரைப்படம் குறித்து தமிழகத்திலும், அதனைத் தாண்டிய ஜெயலலிதாவின் வாழ்க்கையை தெரிந்த பலரும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள்.

இது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு முழுவதுமாக அல்ல அவரது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை மட்டுமே அடிப்படையாக வைத்தே தலைவி திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

1965ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை வைத்து ‘தலைவி’ படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஏ. எல். விஜய்.

ஜெயலலிதாவின் சர்ச்சைக்குரிய வாழ்க்கை கதையை எந்தவித சிக்கலும் இல்லாமல் படமாக்கியுள்ள விஜய் தலைவி படம் தொடங்கும்போதே இது கற்பனை கலந்த கதை என்று சொல்லிவிடுகிறார்.

அதனால் இது முழுமையான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வரவில்லை ஒரு சில சம்பவங்களை மட்டுமே எடுத்துக் கூறியிருப்பது படத்தை பார்க்கும்போது நமக்கு புரிகிறது.

தலைவி திரைப்படம் முழுமையாக ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையைக் கூறியிருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என அரசியல் வட்டாரத்திலும் விமர்சகர்கள் மத்தியிலும் கூறப்படுகின்ற தகவலாகும்.

ஏனென்றால் படத்தின் இடைவேளை வரை எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா இருவருக்கும் இடையே காதல் எப்படி மலர்ந்தது என்பதலிலேயே பாதி நேரம் சென்றுவிடுகிறது.

ஜெயலலிதாவின் ஆரம்பகாலம் முதல் எம்ஜிஆருடன் ஏற்பட்ட நட்பு, அவர் நடிகையாக அறிமுகம் ஆனது எப்படி, பின்பு அவருடைய காதல் வாழ்க்கை, அதன் பின்னர் கருணாநிதி எம்ஜிஆர் இருவருக்கும் இடையிலான அரசியல், இதன் பின்னர் எம்ஜிஆரின் அரசியல் பிரவேசம், அதற்கிடையில் ஜெயலலிதா எம்ஜிஆர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு, மீண்டும் ஜெயலலிதாவின் அரசியல் வருகை எப்படி அமைந்தது, அதற்கு யார் யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார்கள், அதன் பின்னர் ஜெயலலிதா எவ்வாறு முதல்வரானார் உள்ளிட்ட சில சம்பவங்களை அடிப்படையாக வைத்துத்தான் தலைவி திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதனை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தாண்ட, ஒரு நடிகை எவ்வாறு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழக முதல்வரானார் என்று அறியும் படியாக திரைக்கதை ஓட்டம் இருக்கிறது.

முக்கியமாக ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தலைவி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களின் பெயர்களைக் கூட சற்று சுருக்கியும் மாற்றியும் பயன்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை தலைவி உருவாக்கவில்லை என்ற விமர்சனமே எழுகிறது.

படத்தில் வரும் எம்ஜிஆர், ஜெயா, ஆர். என். வீரப்பன், கருணா, சசி என நிஜமான கதாபாத்திரங்களின் பெயர்களை சற்று மாற்றி வடிவமைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த அனைத்து விதமான விமர்சனங்களையும் கடந்து படத்தின் உருவாக்கத்தில் இயக்குநர் விஜய் வெற்றி பெற்று உள்ளார் என்று கூறப்படுகிறது.

படத்தின் பிரம்மாண்டமான காட்சியமைப்பு பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் அமர்ந்து பார்க்க வைக்கும் அளவுக்கு மெருகூட்டப்பட்டிருக்கிறது.

படத்தில் ஒளிப்பதிவாளரின் பணி மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது, அதேபோல் பின்னணி இசையும் படத்தை அழகு படுத்தி இருக்கிறது.

படத்தின் காட்சி வடிவமைப்பு இசை, வசனம் என இவை அனைத்துமே ஒரு முழுமையான படத்தின் வடிவமைப்பை கொடுத்திருக்கிறது என்றால் அது உண்மைதான்.

தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ள பொலிவூட் நடிகை கங்கனா ரனாவத் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஜெயலலிதாவின் வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறார்.

காதல், பிரிவு, ஏக்கம் உறுதித்தன்மை என தனக்கு தெரிந்த கலை நயங்களையும், நவரசங்களையும் கலந்து இயன்றவரை ஈடு கொடுத்து இருக்கிறார் கங்கனா ரனாவத்.

இயன்றவரை எம்.ஜி.ஆரின் உடல் மொழி ,அவருடைய நடிப்பின் பாணி என அவற்றை உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார் அரவிந்தசாமி.

தலைவி திரைப்படத்தில் ஆர்.எம்.வீரப்பனாக நடித்துள்ள சமுத்திரகனியின் எதிர்வினை ஆற்றல் மிகச்சிறப்பு என சொல்லலாம்.

நிச்சயமாக தலைவி திரைப்படம் ஜெயலலிதாவின் முழுமையான வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இல்லை என்றாலும், அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சில சம்பவங்களை மையமாக வைத்து எடுத்து கூறப்பட்டிருக்கிறது திரைக்கதை.

இருந்தபோதிலும் ஒரு பிரமாண்ட திரைப்படத்தை எடுத்து ,மக்கள் மத்தியில் வாழ்க்கை கதையை எடுத்துச் சொன்ன விதம் இயக்குநரின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.