January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தலைவி’ அரசியல் திரைப்படம் கிடையாது என்கிறார் இயக்குநர்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி அரசியல் திரைப்படம் கிடையாது என அப்படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய் தெரிவித்திருக்கிறார்.

இது முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் பயணம் குறித்த திரைப்படம் என இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதி தலைவி படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை,தலைவி படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார்கள்.கங்கனா ரணாவத், அரவிந்தசாமி, இயக்குனர் ஏ.எல். விஜய்,மதுபாலா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அப்போது பேசிய இயக்குநர் விஜய், தலைவி அரசியல் திரைப்படம் அல்ல என தெரிவித்திருக்கிறார்.

அதேபோல்,தலைவி திரைப்படத்தை பல ஓ.டி.டி நிறுவனங்கள் நேரடியாக வெளியிட வந்ததாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.ஆனால் தலைவி திரைப்படத்தை திரையரங்கில்தான் வெளியிட காத்திருந்ததாக தயாரிப்பாளர் விஷ்ணுவர்த்தன் இந்தூரி கூறியுள்ளார்.

மேலும் இத்திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்படத்தின் கதாநாயகியான கங்கனா ரணாவத்,தலைவி திரைப்படத்தை பார்க்க குழந்தை போன்று ஆர்வத்துடன் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தலைவி திரைப்படத்தை இன்னும் தான் பார்க்கவில்லை என்பதால் அப்படத்தை முழுமையாக பார்க்க ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடித்த அரவிந்த்சாமி, தம்பி ராமையா, சமுத்திரகனி, பாக்யஸ்ரீ உள்ளிட்ட நடிகர்களை கங்கனா ரணாவத் பாராட்டி பேசியுள்ளார்.

மேலும் தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மதுபாலாவை கங்கனா புகழ்ந்துள்ளார்.

அதேபோல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் அரவிந்தசாமி,தலைவி திரைப்படம் தன்னுடைய சினிமா பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆக நடித்துள்ள அரவிந்த்சாமியின் முக அமைப்பு,சிகை அலங்காரம், உடல் பாவனை, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தத்ரூபமாக பொருந்துவதை நாம் காணக் கூடியதாக இருக்கிறது.

இதற்காக நடிகர் அரவிந்தசாமி கடுமையாக உழைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ,ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் 10-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.