January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் ஆர்யா போல் பேசி ஜெர்மனி பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி; விசாரணையில் அம்பலம்

70 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ததற்கு பொலிஸாருக்கு நடிகர் ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நடிகர் ஆர்யா ஜெர்மன் பெண் ஒருவரிடம் 70 லட்சம் ரூபா பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இந்த பண மோசடி புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில்,சென்னை புளியந்தோப்பை சேர்ந்த இருவர் நடிகர் ஆர்யாவை போல் பேசி ஜெர்மன் பெண்ணிடம் 70 லட்சம் ரூபாய் பண மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த பெண் விட்ஜா, ஜெர்மனியில் குடியுரிமை பெற்று அங்குள்ள சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் குறித்த பெண், நடிகர் ஆர்யா 70 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஒன்லைன் மூலமாக கடந்த பெப்ரவரி மாதம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் நடிகர் ஆர்யாவுடன் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனாவில் பண கஷ்டத்தில் இருப்பதாகக் கூறி தன்னிடம் 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஒன்லைன் மூலமாக பெற்று ஏமாற்றியதாக புகாரில் அப்பெண் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.

ஆர்யாவுக்கு பணம் அனுப்பியதாக கூறப்பட்ட வங்கி கணக்கு மற்றும் மெசேஜ் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து சைபர் கிரைம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதையடுத்து நடிகர் ஆர்யா கடந்த 10 ஆம் திதி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.

அப்போது அவரது செல்போனை சைபர் க்ரைம் பொலிஸார் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதில் குறித்த ஜெர்மனி பெண்ணுக்கு எந்த விதமான மெசேஜும் ,செல்போன் அழைப்புகளும் ஆர்யா எண்ணிலிருந்து செல்லவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக நடிகர் ஆர்யாவுக்கும், ஜெர்மன் பெண்ணுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சைபர் கிரைம் பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

தொடர்ந்து கிடைத்த ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தியது சைபர் க்ரைம் பொலிஸார்.

அப்போது விசாரணையில், சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் என்பவர் ஆர்யாவைப் போல நடித்து அப்பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது .

அவரது உறவினர் முகமது ஹூசைனி பையாக் உடந்தையாக செயல் பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

விசாரணையில் நடிகர் ஆர்யா பெயரில் போலி வலைத் தளத்தை உருவாக்கி ஜெர்மனி பெண்ணிடம் பண பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, இருவரையும் ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கத்தில் பொலிஸார் கைது செய்தனர்.

கைதான 2 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து வருகிற 7 ம் திகதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறைக்கு நடிகர் ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

உண்மைக் குற்றவாளிகளை கைது செய்த சென்னை காவல் ஆணையர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் மற்றும் சென்னை சைபர் க்ரைம் பொலிஸார் ஆகியோருக்கு தான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.

இது நான் வெளிப்படுத்தாத ஒரு மன உளைச்சலாக இருந்தது.என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என ஆர்யா தெரிவித்திருக்கிறார்.