பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் நடித்துள்ள தலைவி திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி ’தலைவி’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.அதன் பின்னர் கொரோனாவால் படத்தை குறிப்பிட்ட திகதியில் வெளியிட முடியாது என விளக்கம் கொடுத்தது படக்குழு.
இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதால்,செப்டம்பர் 10 ஆம் திகதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தலைவி படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்கியுள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாகவும்,எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தில் மதுபாலா,சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தலைவி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து,இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து திரையரங்குகள் திறக்கப்படாததால் வெளியீடு குறித்து அமைதி காக்கப்பட்டு வந்தது .
இந்நிலையில் தலைவி திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது.
பல்வேறு ஓடிடி நிறுவனங்கள், அதிக விலைக்கு நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்கு அணுகிய போதும்,படக்குழுவினர் திரையரங்கில்தான் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தனர்.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தலைவி திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
அதே நேரம் குறித்த 10 ஆம் திகதியன்று நடிகர் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் நேரடியாக தொலைக்காட்சியிலும்,சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படம் ஓடிடியிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் முதல் படமாக தலைவி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.