July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நெற்றிக்கண்

blind என்ற ஒரு கொரியன் திரைப்படத்தின் தமிழாக்கம் தான் இந்த நெற்றிக்கண் திரைப்படம் என கூறப்படுகிறது.

கொரியன் திரைப்படத்தின் அதிகாரபூர்வ சம்மதத்தை பெற்று தமிழில் நெற்றிக்கண் எனும் படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்.

இந்த திரைப்படத்தை அவள் என்ற படத்தை இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்ற இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.

நெற்றிக்கண் திரைப்படம் க்ரைம், த்ரில்லர் சினிமா படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு விருந்து என்றே சொல்லலாம்.

நெற்றிக்கண் திரைப்படத்தில் கண்தெரியாத சி.பி.ஐ அதிகாரியாக நயன்தாரா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார்.

ஒரு விபத்தில் திடீரென பார்வையை இழந்த சி.பி.ஐ அதிகாரியாக நயன்தாரா மீண்டும் பணியில் சேர முடியாமல் இருக்கும் சூழலில் தன் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தடுத்த எதிர்பாராத சம்பவங்களும் ,தனிமையும்,அதிலிருந்து மீண்டு வர அறிவுக்கூர்மையை பயன்படுத்தும் விதமும் திருப்பங்களும் இந்த படத்திற்கான மையக்கருவாக இருக்கிறது.

முக்கியமாக இந்த நெற்றிக்கண் படத்தில் வில்லனாக நடிகர் அஜ்மல் மிரட்டியிருக்கிறார்.

குறிப்பாக இளம் பெண்களை கடத்தும் ஒரு சைக்கோவாக அஜ்மல் கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார்.தமிழ் சினிமாவின் பல படங்களில் சைக்கோ கதாபாத்திரங்கள் நிறைய வந்திருப்பதாலோ என்னவோ இந்த அஜ்மலின் சைக்கோ கதாபாத்திரம் கதைக்கு முக்கியத்துவமானதாக பெரிதாக பேசப்படவில்லை என தோன்றுகிறது.

படத்தின் பின்னணி இசையை பார்க்கும்போது இசையமைப்பாளர் கிரிஷ் கொடுத்த ரகம் பின்னணி இசை படத்திற்கு ஓரளவு மெருகேற்றி இருப்பதாகவே தோன்றுகிறது

ஒரு விதமான படபடப்பையும், பயத்தையும், அடுத்தடுத்த எதிர்பார்ப்பையும் கலந்து என்ன நடக்கப்போகிறதோ என்ற டென்ஷனை ஏற்படுத்துகிறது பின்னணி இசை.

நெற்றிக்கண் படத்திற்கு ஓரளவு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது பின்னணி இசை,சவுண்ட் எஃபெக்ட்.ஒரு சாலை விபத்தின் பின்னணியில் என்ன நடந்தது, யார் சம்பந்தப்பட்டவர்கள் என பலவிதமான புதுபுது தகவல்கள் கிடைக்க விசாரணை நகர்வதே படத்தின் விறுவிறுப்பாக இருக்கிறது.

நயன்தாராவுக்கும் அஜ்மலுக்கும் நடக்கும் சேசிங் மற்றும் அட்டாக் தான் பார்வையாளர்களை அடுத்து என்ன நடக்குமோ என படபடக்க செய்யும் காட்சிகளாக இருக்கின்றன .

சைக்கோ கொலைகாரனான அஜ்மல் பெண்களை ஏன் கடத்தி கொலை செய்கிறான் என்பதே படத்தின் கிளைமாக்ஸ் ஆக இருக்கிறது.

படத்தில் என்னதான் நான்கு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் இறுதியாக நயன்தாரா வளர்க்கும் நாய் குட்டியும் அதில் முக்கிய பங்காற்றுவது தெரிகிறது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் நடிப்பிற்கு எப்போதுமே ரசிகர்கள் குறை கூறியதில்லை.அந்த அளவிற்கு நெற்றிக்கண் திரைப்படத்திலும் பார்வையற்ற பெண்ணாக ,நடை ,உடை, பாவனை ,உணர்ச்சிகளில் தனது அசாத்திய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் நயன்தாரா.

தனது நடிப்புத் திறமைக்கு அடுத்த மைல் கல்லாக சிறந்த கதை தேர்வாக,நயன்தாராவிற்கு இந்த நெற்றிக்கண் திரைப்படம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

முக்கியமாக நைட் எபெக்ட் காட்சிகள் படம் முடிந்த பின்னரும் ரசிகர்களின் மனதில் வந்து செல்லும் வகையில் படக்காட்சிகள் உறுத்தலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படத்தில் ஒளிப்பதிவாளரின் காட்சியமைப்பும் ஒரு கிரைம் திரில்லர் படத்துக்கு ஏற்றவாறான கமரா மூவிங்கும் பாராட்டத்தக்கது.

இதை ஒரு கொரியன் படத்தின் முற்று முழுதான கொப்பியாக பார்க்காமல் ஒரு தமிழ் படமாக பார்த்தால் நெற்றிக் கண்ணின் ரகசியம் தெரியும்

படத்தில் அதிகளவாக கொலை, அடிதடி ,ரத்தம் என காட்சிகள் வருவதால் குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்கலாம் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

ஆகவே நெற்றிக்கண் திரைப்படம் முற்றுமுழுதாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமைந்திருக்கிறது.

தனது முழு ஆளுமைத் திறனையும் இந்த படத்தில் காட்டி இருக்கிறார் நயன்தாரா.அவரின் அடுத்தடுத்த படங்களும் இதைவிட சிறப்பாக அமையும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அவரின் ரசிகர்கள்.