நடிகர் தனுஷின் 43 வது திரைப்படத்திற்கு மாறன் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில்,புதிய திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்தப் படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்துக்கு தலைப்பை இறுதி செய்யாமல் படப்பிடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வந்த படக்குழு,அந்த படத்திற்கு ‘மாறன்’ என்று தலைப்பு வைத்திருக்கின்றனர்.
இதனால் இன்று (28) தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
மாறன் என தலைப்பிடப்பட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷின் ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
முழுவதும் த்ரில்லர் பாணியில் மாறன் திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இதே மாறன் என்ற தலைப்பில் சத்யராஜ்,வடிவேலு நடிப்பில் ஏற்கெனவே ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா வாழ்த்து மடலை வெளியிட்டுள்ளார்.
இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக் கதவைத் தட்டும் என தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா
திரையில் தோன்றும் ஒருசில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுருவி நம் உணர்வோடு, உறவோடு பின்னப்பட்டதாய் அமைந்துவிடும்.
ஆனால், கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குணநலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதைக் கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்து விடுவதுண்டு.
நிஜ வாழ்க்கையில் எப்படியோ,அதைத் திரையிலும் பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே.அதில் உன்னை நான் முதன்மையானவனாக பார்க்கிறேன் என இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது வாழ்த்து மடலில் புகழ்ந்துள்ளார்.
எளிமை, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் ‘நான்’ என்கின்ற அகந்தை அற்ற பணிவு, சிறந்த கலை தொழில்நுட்ப அறிவு. இது போதும் டா. இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக் கதவைத் தட்டும்.
பேரன்புமிக்க ‘தங்க மகன்’ தனுஷ் இன்றைய நன்நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்”
என இயக்குனர் இமயம் பாரதிராஜா பிறந்தநாள் வாழ்த்து மடலில் குறிப்பிட்டிருக்கிறார்.