
வாரிசு நடிகர் என்று அறியப்பட்டாலும் சினிமாவில் இயக்குனர்களாக தந்தையும்,அண்ணனும் இருந்த போதிலும் கூட தன் திறமையால் தேசிய விருதுகள் இரண்டை பெற்றது என்பது இவருடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா என்னும் இயற்பெயர் கொண்ட இவர் திரைத்துறையில் தனுஷ் என்ற பெயரின் மூலம் அறிமுகமாகினார்.
பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி பல்வேறு பிரிவுகளில் பல விருதுகளை வென்றுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் இவரின் ரசிகர்களால் இந்தியன் புரூஸ் லீ என்னும் புனை பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார்.
துள்ளுவதோ இளமை என்ற படத்தில் தனது தந்தையான கஸ்தூரிராஜா இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் தனுஷ்.
காதல் கொண்டேன் படத்தில் முதல் படத்தின் வெற்றியை தக்க வைத்துக் கொண்டு யார் இந்த புது பையன் என்று தமிழ்த் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறார்.
இதிலிருந்து அவருடைய வெற்றிப் பயணம் தொடர்கிறது. புதுப்பேட்டை ,ஆடுகளம்,வடசென்னை,அசுரன்,கர்ணன் என இந்தியாவே திரும்பிப் பார்க்க வைத்த இந்த வெற்றிக்குப் பின்னால் கடுமையான அவருடைய உழைப்பும் திட்டமிடலும் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
பென்சில் போன்ற உடம்புக்குள் நவரசங்களும் நிறைந்த நடிப்பை உருவாக்கிவிட்டிருந்தது புதுப்பேட்டை.புதுப்பேட்டை கொக்கி குமாரின் நடிப்பில் சொக்கிப்போய் ரசிகர்கள் கட்டுண்டு கிடந்தனர் என்றால் அது பொய்யல்ல.
விமர்சகர்கள் பாராட்டைப் பெற்ற புதுப்பேட்டையைத் தொடர்ந்து வெளியான திருவிளையாடல் ஆரம்பம்,வணிக ரீதியாக தனுஷிற்கு பெரிய வெற்றியை தந்தது.
அம்பிகாபதி என்கிற ராஞ்சனா என்ற இந்தி படத்திலும் அவர் நடித்து இந்தி திரையுலகிலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் பேச வைத்தவர்.இந்தியாவில் தன்னுடைய நடிப்புத் திறமையை பேச வைத்த தனுஷ்,உலகளவில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள த கிரே மேன் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்து வருகிறார்.
ஏற்கனவே வை திஸ் கொலவெறி என்ற பாடலின் மூலம் உலகளவில் ஒரு பாடகராக இவர் பிரபலமாகி இருக்கிறார்.நடனத்திலும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி சிறந்த நடிகர்,சிறந்த பாடகர்,ஆகச் சிறந்த நடனக் கலைஞர்,தயாரிப்பாளர்,இயக்குனர்,பாடலாசிரியர் என பன்முக திறமைகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்.
பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் தனது முத்திரையை பதித்திருக்கிறார் தனுஷ்.பவர் பாண்டி,வேலையில்லா பட்டதாரி ,வடசென்னை,3,சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல்,ஷமிதாப் என்ற இந்தி திரைப்படம் ஆகிய படங்கள் இவர் தயாரிப்பில் வெளிவந்த ஆகச் சிறந்த படங்களாகும்.
38 வது வயதில் அடி எடுத்து வைக்கும் தனுஷிற்கு ரசிகர்கள் ஒரு பொதுவான டிபியை உருவாக்கி இருக்கிறார்கள் .
நாணயத்தின் ஒரு பக்கத்தில்,வரலாற்று நாயகன் தோற்றத்தில் அமைந்துள்ள தனுஷின் படம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காமன் டிபிஐ பார்க்கும்போது கிரேக்க பழங்கால நாணய வடிவமைப்பை ஒத்ததாகவே இருக்கிறது.பழங்கால மன்னர்கள் வரிசையில் நாணயங்களில் வரும் படங்களை போன்று தனுஷின் படம் அமைந்திருக்கிறது.
இதை நடிகர் தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் .
சிறகுகளுடன்,கழுத்தில் ருத்திராட்ச மாலையுடன்,காமன் டிபியில் உள்ள தனுஷின் படமானது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் வடிவமாக இருக்கலாமோ? என்ற விவாதம் இப்போதே ஆரம்பமாகி இருக்கிறது.
எது எப்படி இருப்பினும் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ,நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என்று அறியப்பட்ட காலங்களை கடந்து, தனி ஆளுமையாக இந்தியாவை தாண்டி உயர்ந்து கொண்டிருக்கும் தனுஷ் அவர்களின் இந்த வெற்றிக்கு அவருடைய உழைப்பு ஒன்றே மூலதனம் என்று சொல்லலாம்.
38 வது பிறந்த நாளை கொண்டாடும் தனுஷிற்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.அத்துடன் திரை நட்சத்திரங்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் நடிகர் தனுஷுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.